×

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்

* நேற்று முதல் திண்டிவனம் சாலை அடைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் நேற்று முதல் திண்டிவனம் சாலை முற்றிலுமாக  அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் திண்டிவனம் சாலை அடைக்கப்பட்டு ஏற்கனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தற்போது ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் வரை நடைபெற உள்ளதால், வேட்டவலம், விழுப்புரம், திருச்சி, திருக்கோவிலூர் செல்லும் வாகனங்களுக்கு நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், திண்டிவனம் சாலையில் பெரியார் சிலை அருகே சிமென்ட் தடுப்புகள் அமைத்து சாலை அடைக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, ஆர்டிஓ அலுவலகம் வரை மட்டும் கார் மற்றும் பைக்குகள் செல்ல மட்டும் அனுமதி உள்ளது. மற்ற வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வேட்டவலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் சாலை வழியாக தீபம் நகர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரிங்ரோடு வழியாக வெளியே செல்லவும், அதேபோல் இந்த வழிதடங்களில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் எடப்பாளையம் கிராமத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாகவும், மங்கலம் சாலை வழியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai - Tindivanam Road , Tiruvannamalai ,Tindivanam ,Road Closed,Railway Bridge ,Bridge,
× RELATED போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் செலுத்த ஆன்லைன் வசதி: இன்று தொடக்கம்