×

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்புகளை கட்டும் குடிசை மாற்று வாரிய திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 4780 வீடுகளை கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆலந்துரை, காளிமங்கலம் பகுதிகளில் 600 வீடுகள், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகள், பேரூர் செட்டிபாளையத்தில் 2,500 வீடுகள், மற்றும் பத்தனவயலில் 70 வீடுகளும் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், இத்திட்டத்தின் மூலம், குடிசை மாற்று வாரியம் வீடுகள் அமைக்கும் பகுதியானது, நிலச்சரிவு அதிகம் ஏற்படும் மற்றும் விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.

எனவே, இங்கு வீடுகளை கட்டினால் பிற்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடையும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது, இத்திட்டத்திற்காக வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்டவற்றின் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மலைப்பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலும் வீடுகள் கட்டப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு, குடிசை மாற்று வாரியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியவை, 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்துள்ளது.


Tags : High Court ,government ,Tamil Nadu , Veliyangiri Hill, Houses, Case, Tamil Nadu Government, High Court
× RELATED சிட்லபாக்கம் ஏரி புறம்போக்கு...