தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கடல் அரிப்பில் தெரிவது புயல் அழித்த சாலையா?

* தவறான தகவல் என அதிகாரி, மீனவர்கள் திட்டவட்ட மறுப்பு

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது கடலரிப்பில் வெளியே தெரிவதாக தவறான வதந்தி பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தை துவக்குவதற்கு முடிவு செய்த ஆங்கிலேயே அரசு தனுஷ்கோடி துறைமுகம், பாம்பன் கடலில் ரயில் பாலம், மானாமதுரை முதல் மண்டபம், பாம்பன் வழியாக தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு ரயில் பாதை அமைக்க பணிகளை துவக்கினர்.

கப்பல் துறைமுகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பணிகள் முடிந்ததால் 1914ல் மானாமதுரையிலிருந்து தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு ரயில் மற்றும் தலைமன்னார் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. 1964, டிச. 23ல் அடித்த புயலில் தனுஷ்கோடி நகரம் அழிந்ததால் ரயில் போக்குவரத்து கைவிடப்பட்டது. புயலுக்குப்பின் பாலைவனம் போல் காட்சியளித்த தனுஷ்கோடிக்கு 1968ல் தமிழக முதல்வராக அண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி பதவியில் இருந்தபோது முதன் முதலாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் கருணாநிதி முதல்வராக பதவியில் இருந்தபோது சாலைப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

1974ல் ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தனுஷ்கோடிக்கு நகர் பேருந்துகளும் இயக்கப்பட்டன. சில ஆண்டுகளில் கடலரிப்பு ஏற்ப்பட்டு தனுஷ்கோடி சாலை சேதமடைந்ததால் முகுந்தராயர் சத்திரம் வரை போக்குவரத்து தொடர்ந்தது. இதன் பின்னர் 1994ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மீண்டும் சேதமடைந்த தனுஷ்கோடி சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் புதுப்பிக்கப்பட்டது.

இதுவும் சில ஆண்டுகளில் சேதமடைந்ததால் முகுந்தராயர் சத்திரம் செக்போஸ்டுடன் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு முகுந்தராயர்சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ரூ.60 கோடி செலவில் இருவழிச்சாலை அமைக்கப்பட்டு ராமேஸ்வரம் - அரிச்சல்முனை இடையே போக்குவரத்து தொடர்கிறது.
இந்நிலையில் தனுஷ்கோடிக்கு ஏற்கனவே சாலை இருந்ததாகவும், 1964ம் ஆண்டு புயலில் அழிந்ததாகவும், தற்போது கடல் அரிப்பில் சேதமடைந்த சாலையின் சில பகுதிகள் வெளியே தெரிவதாகவும் வதந்தி பரவியது.

இதனால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டுதோறும் கடல் அரிப்பு காலத்தில் தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் 1994ல் போடப்பட்ட பழைய தேசிய நெடுஞ்சாலையின் சேதமடைந்த பகுதிகளே புயலுக்கு முன்பு இருந்த சாலை என மக்கள் மத்தியில் தவறாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து தனுஷ்கோடி மீனவர் செல்லத்துரை (87) கூறுகையில், ‘‘தனுஷ்கோடியில் பிறந்து வளர்ந்தவன் நான். மீன்பிடித்தொழில் செய்து வந்ததுடன் 1949ல் இருந்து 64ம் ஆண்டு வரை தனுஷ்கோடி திமுக நகர் செயலாளராக இருந்துள்ளேன்.

1964 புயலுக்கு முன்பு வரை தனுஷ்கோடியில் ரயில் பாதை மட்டுமே இருந்தது. சாலை வசதி இல்லை. மணல் பாதைதான். மாட்டுவண்டி மட்டும்தான். மீன், கருவாடைக்கூட மாட்டுவண்டியில்தான் ராமேஸ்வரம் கொண்டு செல்வோம். தனுஷ்கோடிக்கு வந்து செல்லும் ரயில் புதுரோடு ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும். அங்கு இறங்கி ராமேஸ்வரம் வருவோம். கருணாநிதி முதல்வரானதும் தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டது. தனுஷ்கோடிக்கு டவுன்பஸ் வந்தது.

இருமுறை போட்ட சாலை கடலரிப்பில் உடைந்து மணல் மூடியதால் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையிலிருந்து மக்கள் வேன்களில் தனுஷ்கோடி செல்லும் நிலை உருவானது. கடல் அரிப்பினால் சேதமடைந்த சாலையின் ஒரு பகுதிதான் கடல் சீற்றத்தினால் தற்போது வெளியில் தெரிகிறது. இது சாதாரண விஷயம். புயலுக்கு முன்பு ராமேஸ்வரத்திலிருந்து சாலை வசதியெல்லாம் இல்லை. படகு மூலம் பக்தர்கள் தனுஷ்கோடிக்கு வருவதுண்டு. புயலில் அழிந்த சாலைப்பாலம் தெரிவதாக பொய்யான தகவலை பொதுமக்களிடம் திட்டமிட்டு பரப்புகின்றனர். இதுபோல் தனுஷ்கோடியை பற்றி பல்வேறு தவறான செய்திகள் அவ்வப்போது வெளிவருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது’’ என்றார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் தனுஷ்கோடி செல்லும் பகுதி முழுவதும் மணலாகத்தான் இருந்துள்ளது. 1964 தனுஷ்கோடி புயலுக்குப்பின் 1968ல் முதன்முதலாக மாநில நெடுஞ்சாலைத்துறையினால் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி துறைமுகம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கி 1969ல் பயன்பாட்டிற்கு வந்தது. 1970ல் மதுரை முதல் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதால் அதே ஆண்டில் பாம்பன் சாலைப்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 1994ல் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மீண்டும் தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது அரிச்சல்முனை வரை இருவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது’’ என்றார்.

Tags : road ,storm ,coast ,Dhanushkodi , Cyclone , rameshwaram, pampan, Bridge, Dhanushkodi
× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...