×

மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை என தகவல்

புதுடெல்லி: 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க பிரதமர் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில ஆளுநர்களின் பதவிக்காலம், அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. இதுதவிர சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக மத்திய பிரதேச மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், அம்மாநிலத்திற்கு தனியாக ஆளுநரை நியமிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிசோரம் மாநிலத்தில் ஆளுநராக இருந்த கும்மணம் ராஜசேகரன் தமது பதவியை ராஜினாமா செய்ததால், அங்கும் ஆளுநரை நியமிக்க வேண்டியுள்ளது. கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆந்திரா மற்றும், தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக உள்ள நரசிம்மன், ஏதாவது ஒரு மாநிலத்தில் தன் பதவியை தொடரவும், மற்றொருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களில் பாஜகவின் மிக மூத்த தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும், ஜனாதிபதியின் விருப்பப்படி ஆளுநர்கள் பணியாற்றுவதால் இவர்களில் சிலரின் பதவிக்காலம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரையிலும், அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று  உள்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : NEW DELHI ,governors ,Central Government ,states ,Kerala ,West Bengal , West Bengal, Kerala, 12 State, New Governor, Central Government
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...