×

மகாராஷ்டிராவில் குடிநீர் வரி செலுத்தாத 18 அமைச்சர்களின் பெயரை வெளியிட்டது மாநகராட்சி: ரூ.7.44 லட்சம் வரி செலுத்தாத முதல்வர்!

மும்பை: மகாராஷ்டிரா முதலவர் தேவேந்திரா பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களா, ரூ.7.44 லட்சம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர் ஷகீல் அகமது ஷேக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஆர்.டி.ஐ. அளித்துள்ள பதிலில், மகாராஷ்டிரா மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் இதர அரசியல் தலைவர்கள் சுமார் 45 லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 18 மாநில அமைச்சர்களின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களா மட்டும் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 981 ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், அம்மாநில நிதியமைச்சரின் தேவ்காரி பங்களா சுமார் ரூ.4.45 லட்சம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாகவும், போக்குவரத்து துறை அமைச்சரின் மேக்தூட் பங்களா சுமார் ரூ.1.61 லட்சம் வரி பாக்கி மற்றும், குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பங்கஜா முண்டேவின் பங்களா சுமார் ரூ.35,000 வரி பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், சுதிர் முங்கந்திவார், திவாகர் ராவ்தே, ஆஷிஷ் ஷெலார், சுபாஷ் தேசாய், ஏக்நாத் ஷிண்டே, சந்திரசேகர் பவன்குலே மற்றும் மகாதேவ் ஜங்கர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய செயற்பாட்டாளர் ஷகீல் அகமது ஷேக், மாநிலத்தின் முதல்வர் மற்றும் அமைச்சர்களே சரியான நேரத்தில் வரி செலுத்த தவறும்போது, இதனை சாதாரண மக்கள் எவ்வாறு செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், பொதுமக்கள் சரியான நேரத்தில் வரி செலுத்தவில்லை எனில் அவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. எனவே, முதல்வர் உள்பட வரி செலுத்தாத அனைத்து அமைச்சர்களின் பங்களாக்களிலும் தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.



Tags : Maharashtra ,ministers , Maharashtra, Water Tax, Ministers, Corporation, Chief Minister, Devendra Fadnavis
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...