×

தலித் சிறுமி கொலைக்கு உபி அரசுதான் காரணம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி:  ‘உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம்,’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள், கொலைகள் அதிகரித்து விட்டன. அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆனால், மாநில அரசு இதனை பற்றி கவலைப்படுவது இல்லை’ என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், உன்னாவ் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த  12 வயது தலித் சிறுமி கடந்த வியாழன்று இரவு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அரசின் அலட்சியப்போக்குதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அஜய் சிங் பிஸ்்த் (உபி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் இயற்பெயர்) ஆட்சியானது தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள், கொடூரமான குற்றங்களுக்கு ஒப்பாகி இருக்கிறது. உன்னாவில் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அவமானகரமானது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது தெளிவாகிறது. இது, காட்டாட்சியா?’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “கடத்தி கொல்லப்பட்ட சிறுமி, தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும்,” என்றார்.


Tags : government ,UP ,Congress ,murder , UP government ,Dalit girl's murder, Congress alleges
× RELATED காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு...