இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை : தேவகவுடா மீண்டும் பரபரப்பு பேட்டி

பெங்களூரு : ‘‘இனிவரும் காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும். மற்ற கட்சிகளுடன் கூட்டணி  என்ற பேச்சுக்கே இடமில்லை,’’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். கர்நாடகாவில்  காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இக்கட்சியை சேர்ந்த குமாரசாமி, முதல்வராக உள்ளார். ஆனால்,  இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அமைச்சரவையை பகிர்ந்து கொண்டு பணியாற்றி  வருகின்றனர்.  கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், மஜத மகளிர்  அணியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொண்டார். பின்னர்,அவர் அளித்த பேட்டி:

மஜத சார்பில் முதன் முறையாக  கர்நாடகாவில் மகளிர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  மாநாடு ஜூலையில் நடக்கிறது. ஆனால், இடம் மற்றும் தேதி பற்றி இன்னும்  முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும். மக்களிடம்  மஜத.வுக்கு என தனி செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை இழக்க நாங்கள்  விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டாலும், இனி வரும்  காலங்களில் இழந்ததை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மஜத.வுக்கு  பலம் சேர்க்கும் வகையில் மகளிர் அணியின் நிர்வாகிகளை நியமிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

மஜத.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்.  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் நாங்கள்  சரியான பாடம்  கற்றுக்கொண்டு விட்டோம். இந்த தேர்தல் முடிவுக்கு பின் மஜத.வின் பலம்   என்ன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, எதிர்வரும் காலங்களில் மஜத தனது  சொந்த சக்தியை கொண்டு அனைத்து தேர்தலிலும் தனித்தே போட்டியிடும். இனி மற்ற  கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். ‘முதல்வர் குமாரசாமிக்கு காங்கிரசார் அதிகளவில் தொல்லை கொடுக்கின்றனர். இதனால், கர்நாடகா கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடும்’ எனக் கூறி இரு தினங்களுக்கு முன் பரபரப்பு ஏற்படுத்திய தேவகவுடா, தற்போது, எதிர்காலத்தில் காங்கிரசுடன்  தனது கட்சி கூட்டணி அமைக்காது என கூறியிருப்பது, மஜத - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : coalition ,party ,elections , no talk of coalition , party,coming elections
× RELATED கோவில்பட்டியில் பாமகவினர் பாஜவில் ஐக்கியம்