தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகரான சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிற்சாலைகள், பள்ளிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் மூடப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு பலர் சென்று வருகின்றனர். இதனால், முறையாக தண்ணீர் விநியோகம் செய்யக்கோரி பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காலி குடங்களுடன் குடிநீர் வாரிய அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் முற்றுகையிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையில், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக வதந்தி கிளப்பி வருகின்றனர் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்காத எடப்பாடி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வட்ட, பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று காலை 9.30 மணியளவில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்ப உள்ளனர்.

× RELATED தலைவிரித்தாடும் கடும் குடிநீர்...