×

பிளாஸ்டிக் பயன்படுத்தும் பார்களுக்கு சீல் வைக்கப்படும் : டாஸ்மாக் அதிகாரி தகவல்

சென்னை: டாஸ்மாக் பார்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் தீவிர ஆய்வை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்படுத்தும் பார்களுக்கு இறுதி கட்டவிசாரணைக்கு பிறகு சீல் வைக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளை ஒட்டி 1,400க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. பார்களில் 90 சதவீதம் பிளாஸ்டிக் கப்கள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே, தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான பார்களில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்தனர். இதை தடுக்க நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளையும் அமைத்தது. அதன்படி, ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் பலர் முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால், கடந்த மாதம் சென்னையில் உள்ள பார்களில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின் மூலம் சுமார் 900 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 17ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன்படி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்து முதல்முறை பிடிபட்டால் ₹1 லட்சமும், அடுத்தடுத்து பிடிபட்டால் ₹2 லட்சம் வரையில் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, தமிழக அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பார்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தீவிர ஆய்வை நடத்தவும், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை செய்த பிறகு பார்களில் அதன் பயன்பாட்டை தடுக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டம்தோறும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் தான் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. எனவே, திடீர் ஆய்வையும் மேற்கொள்ள உள்ளோம். பிளாஸ்டிக் பயன்படுத்தி முதல்முறை பிடிபட்டால் நோட்டீஸ் வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பாரை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Plastic , bars are sealed, Task officer information
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...