×

டிராவல்ஸ் வாகனங்களைவிட சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களே அதிகம் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது

சென்னை: ‘தமிழகத்தில் டிராவல்ஸ் கார்களைவிட அதிகளவில் விபத்துகளில் சிக்குவது சொந்த பயன்பாட்டுக்காக வாங்கிய கார்கள்தான். அதில்தான் நிறைய நபர்கள் இறக்கும் சம்பவமும் நடக்கிறது. இந்த விபத்தை தவிர்க்க லாரி, அரசு பஸ்களுக்கு பின்னால் செல்லக்கூடாது’ என, போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் 5.85 லட்சத்துக்கம் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், 5.52 லட்சத்துக்கும் அதிகமான பஸ்கள், 2.15 கோடிக்கும் மேலான இருசக்கர வாகனங்கள், 24.7 லட்சத்துக்கும் கூடுதலான கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை இயக்கும் ஓட்டுனர்கள் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

அதாவது ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, குடிபோதை, மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வதால் விபத்து நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இறப்பது, உடல் உறுப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதைத்தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்களை விற்பனை ெசய்யும் நிறுவனங்களிடத்தில் ெஹல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலைவிதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 2017-18ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான ஓராண்டில் மொத்தமாக 21,906 விபத்து நடந்திருந்தது. இதில், 4,299 பேர் இறந்தனர். 2018-19ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 19,820 விபத்து நடந்துள்ளது. இதில், 3,696 ேபர் இறந்துள்ளனர்.

இவ்வாறு நடந்துள்ள விபத்துக்களில் 80 சதவீதம் அளவிற்கு சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட கார்களாகவே உள்ளது. டிராவல்ஸ் கார்களின் எண்ணிக்கை குறைவே. எனவே, விபத்தை தவிர்க்க லாரி, அரசு பஸ்களுக்கு பின்னால் கார்கள் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக நடந்த விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விபத்தில் அதிகம் சிக்குவது கார்கள்தான். அதுவும் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்டவை. சொந்த கார்களை வாங்கியவர்கள், தினசரி அதை எடுப்பதில்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒருநாள், இரண்டுநாள் தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் போதுமான பயிற்சி மற்றும் வாகன கட்டுப்பாடு அவர்களிடம் இருக்காது. சொந்தக்கார்களில் பெரும்பாலும் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவை முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. தொலைதூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்கின்றனர். அப்போது சம்பந்தப்பட்ட சாலைகளும் அவர்களுக்கு பழக்கமானதாக இருப்பதில்லை. குழிகள் இருப்பதும் தெரிவதில்லை. அப்போது காரை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுவிடுகிறது.

அடிக்கடி ஓட்டாததால், பிரேக்கிற்கு பதில் சில நேரங்களில் ஆக்சிலேட்டரை பதற்றத்தில் அழுத்தி விடுகின்றனர். எனவே அதிகமாக காரை பயன்படுத்தாதவர்கள் ஆட்டோ கியர் வசதி கொண்ட காரை உபயோகிப்பது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது.
அனுபவம் இல்லாத சாலைகளில் பயணிக்கும் போது, மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். தொலைதூரப்பயணத்தின் போது, டயர், பிரேக் சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். லாரி, அரசு பஸ்களை தொடர்ந்து செல்வது ஆபத்தானது. பெரும்பாலும் இத்தகைய வாகனங்களில் பிரேக் விளக்குகள் ஒளிருவதில்லை. அதனால் விபத்து ஏற்படுவது எளிதாகிறது. நமது சாலைகளில் 100 கி.மீ வேகத்திற்கு மேல் செல்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு மேல் வேகமாக பயணிக்க உகந்ததில்லை. முட்டை, பரோட்டா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. அனுபவம் இல்லாத ஆக்டிங் டிரைவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Cars purchased ,own use , crash and die ,travel vehicles
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...