கடும் வெப்ப தாக்குதல் எதிரொலி கோழிக்கறி கிலோ விலை 200ஐ தொட்டது

சென்னை: தமிழகம், ஆந்திர மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப தாக்குதலை சமாளிக்க முடியாமல் கோழிகள் செத்து விழுவதால் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஒரு கிலோ கோழி கறியின் விலை 200ஐ தொட்டுள்ளது. இதனால் கோழி உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உற்பத்தியாளருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உற்பத்தியை குறைத்துள்ளனர். கோழிகள் வெப்பத்தால் சாகாத அளவுக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் தினமும் 1000 லோடுக்கும் மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வேன்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் மேலும் அதிகரிக்கும். கடந்த மாதம் 160க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழிக்கறி, கடந்த ஒரு வாரமாக 200 முதல் ₹220 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோழிக்கறி வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது உற்பத்தியாகும் கறிக்கோழியில், 10 முதல் 20 சதவீதம் வரை கடுமையான வெயிலால் இறந்து விடுகின்றன. அதிக அளவில் கோழி இறைச்சி தேவைப்படும் நிலையில், கோழிகள் இறந்துவிடுவதால் விலை அதிகரித்துள்ளது.
மேலும் வெயிலுக்கு பயந்து கொண்டு பண்ணையாளர்கள் கோழிகளை வளர்க்க ஆர்வம் காட்ட விரும்பவில்லை. பல நாட்கள் வளர்ந்து பிறகு இறந்துவிட்டால் அது பண்ணையாளர்களை பாதிக்கிறது. இதனால், அவர்கள் வெயில் சற்று குறைந்து பிறகு வளர்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதன்பிறகு கறி விலை குறைந்துவிடும்’ என்றனர்.

× RELATED ஹரியாலி சிக்கன்