28ம் தேதி சட்டப்பேரவை கூடும் நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை வருகிற 28ம் தேதி கூடும் நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் புதிய அறிவிப்பு, சட்ட மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் 38 மக்களவை, காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதியில் 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவடைந்த நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் வருகிற 28ம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 20ம் தேதி அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழக  அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த  கூட்டத்தில் சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சட்ட  மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு  கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னர் அனுமதியின் பேரில்  அந்த சட்ட மசோதா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம்

தமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூட உள்ள நிலையில் சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன மானியக்கோரிக்கையை எந்தெந்த தேதிகளில் எடுத்து கொள்வது, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முதல் நாளில் எடுத்து கொள்வதா? அல்லது இன்னொரு நாளில் எடுத்து கொள்வதா? என்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

28ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், மறைந்த  உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம்  ஒத்திவைக்கப்படும். இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை மாதம் இறுதி வரை என சுமார் 1 மாதம் காலம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குரல் எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. இதனால், சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,Edappadi ,cabinet meeting , Chief Minister Edappadi, lead a cabinet meeting today
× RELATED கேரளாவில் கடும் பால் தட்டுப்பாடு: எடப்பாடிக்கு கேரள முதல்வர் கடிதம்