சுவாமிமலை கோயிலில் ரகசிய திருமணம் முதல் மனைவியிடம் சிக்கிய ராணுவ வீரர்

கும்பகோணம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (48). ராணுவ சுபேதார். இவருக்கும் உறவினரான மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஸ்டெல்லாராணி (41) என்பவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கல்லூரி படிக்கும் விஷால் என்ற மகனும், பிளஸ்-2 படிக்கும் சூர்யா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சுபாஷ்சந்திரபோசுக்கும், ஸ்டெல்லாராணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஸ்டெல்லா ராணி, மகன்களுடன் நாசிக்கில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 2ம் திருமணம் செய்ய சுபாஷ்சந்திரபோஸ் முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு மேட்ரிமோனியலில் தனது சுயகுறிப்பை பதிவு செய்தார். மேட்ரிமோனியல் ஏற்பாட்டின் மூலம் மதுரையை சேர்ந்த சோளமுத்து மகள் நித்யா (35) என்பவருக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் திருமணம் நடந்தது.

இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களை சுற்றி பார்க்கவும், தரிசனம் செய்யவும் முதல் மனைவி ஸ்டெல்லாராணி சில நாட்களுக்கு முன் மகன்களுடன் வந்திருந்தார். இவர் நேற்று சுவாமிமலை கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது தனது கணவர், புதுமனைவியுடன் மாலையும், கழுத்துமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுபாஷ்சந்திரபோசும், முதல் மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது நின்றார். உடனே,சுவாமிமலை போலீசில் ஸ்டெல்லா புகார் செய்தார். அதன்பேரில் சுபாஷ்சந்திரபோசை போலீசார் கைது செய்தனர்.

Tags : Soldier ,Swamimalai , Secret wedding , Swamimalai temple
× RELATED தாய்லாந்தில் கண்முடித்தனமாக 21 பேரை...