×

குடிசை தொழிலான மணல் கொள்ளை : மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்:  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தலைமை வகித்து பேசியதாவது:தமிழகத்தில்  தற்போது 4 அரசு மணல் குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால், ஒரு லோடு  மணல் கிடைக்க ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மணல்  லாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கட்டுமான  பணிகளும் முடங்கியுள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மணல்  குவாரிகளை அரசு திறக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வரை விரைவில்  சந்தித்து பேசுவோம்.

தமிழகம் முழுவதும் ஆறுகள், பட்டா நிலங்களில்  நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க, மணல் கடத்தல் தடுப்புபிரிவை அரசு  ஏற்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் மணல்  கொள்ளை குடிசை தொழில்போல நடந்து வருகிறது. இதை தடுக்காமல் காவல்துறை,  வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். மாநில  சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த 20  மணல் குவாரிகளை, உடனடியாக அரசு திறக்கவேண்டும். இதன்மூலம் குறைந்தபட்சம் மணல் லாரி உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் 4 லோடு மணல்  கிடைக்கும். அரசு மணல் விற்பனை நிலையத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க, அரசு ஒப்பந்த பணிக்கு  முன்னுரிமை அடிப்படையில் மணல் கொடுப்பதை நிறுத்தவேண்டும். இவ்வாறு செல்ல.ராசாமணி பேசினார்.

Tags : Cottage industry ,sand burglary,Sand truck owners association indictment
× RELATED யானை தாக்கி விவசாயி பலி