சாட்டிலைட் மூலம் கணக்கெடுத்து சரணாலயம் அறிவிக்கிறார்கள் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்க முடியாது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

நாகர்கோவில்:  சாட்டிலைட் மூலம் கண்காணித்து அவர்கள் சரயாலயம் என்று அறிவிக்கிறார்கள். எனவே மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கவே முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். நாகர்கோவிலில் நேற்று நடந்த தென் மண்டல அளவிலான வனத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்துக்கு பின், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வன காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட 1172 பேர் தேர்வு செய்யப்பட்டு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையில் உள்ள தற்காலிக பணியாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த முடியாது. குறிப்பிட்ட காலத்துக்கு பின், அவர்களின் கல்வி தகுதி, உடல் தகுதி எல்லாம் பார்த்துதான் நிரந்தரம் செய்ய முடியும்.

குமரி மாவட்டம் கீரிப்பாறையில் போதிய பராமரிப்பு இல்லாமல் ரப்பர் மரங்கள் எதுவும் நாசமாகவில்லை. வறட்சியால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அது சரி செய்யப்படும். குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலய பகுதி என்பது மத்திய அரசுதான் முடிவு செய்துள்ளது. கொடைக்கானலிலும் யானைகள் சரணாலயம் என்று அறிவித்து உள்ளனர். சாட்டிலைட் மூலம் கணக்கெடுத்து அவர்கள் அறிவிக்கிறார்கள். கொடைக்கானலுக்கு போகும்போது அங்குள்ள மக்கள், எங்களிடம் எந்த யானைகள் வருது. ஏன் சரணாலயமாக அறிவித்து எங்களை விரட்டுகிறீர்கள் என்கிறார்கள். ரயில் மறியல் எதுவும் நாங்கள் செய்ய முடியாது. மத்திய அரசு திட்டத்தை எதிர்க்க முடியாது. இதுதொடர்பாக பைல்கள் அனுப்பி உள்ளோம்.

ஒரு சில மாவட்டங்களில் வனத்துறைக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும். வனத்துறையும், காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஜப்பான் நிதி உதவியுடன் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. சட்டசபையில் இதுதொடர்பான புதிய அறிவிப்புகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dindigul Srinivasan ,Minister Sindhivasan , Dindigul Srinivasan Interview , Minister Sindhivasan...
× RELATED அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது...