×

குன்னூரில் இரண்டாம் நாளாக சிமி தடை நீட்டிப்பு குறித்து தீர்ப்பாயம் விசாரணை : கர்நாடக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு

குன்னூர்: ‘சிமி’ அமைப்பின் தடை நீட்டிப்பு குறித்து சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தின் இரண்டாம் நாள் விசாரணை நேற்று நடந்தது. கடந்த 1977ம் ஆண்டு ‘சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. மேலும் 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 ஆண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் குன்னூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், தீர்ப்பாயத்தின் சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு மாநிலங்களில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தது.

இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக நேற்றும் நீதிபதி முக்தா குப்தா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டி.ஐ.ஜி. ராஜேந்திரபிரசாத், ஏ.சி.பி. முகமது ஜகத்கான் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக மாநிலத்தில் ‘சிமி’ இயக்கத்தினர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், எனவே இந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி முக்தா குப்தாவிடம் 3 மனு அளித்தனர். இன்றுடன் (திங்கள்) விசாரணை நிறைவடைகிறது.

Tags : SIMI ,Police Officers ,Karnataka ,Kannur , Tribunal hearing , SIMI extension on 2nd day in Coonoor
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...