×

2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடையாது

மதுரை: 2017-18ம் கல்வியாண்டில் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவால் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி பிளஸ் 2 படித்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அவர்களுடைய பள்ளி மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்றிதழில் இலவச லேப்டாப் விநியோகம் செய்யப்பட்டது என சீல் வைத்து, பள்ளி தலைமையாசிரியர் கையொப்பம் போட்டு கொடுப்பார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின், தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக (2017-18, 2018-19) லேப்டாப் விநியோகம் செய்யவில்லை. இந்த கல்வியாண்டில் படித்த மாணவர்கள் லேப்டாப் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் லேப்டாப் வாங்காமல் தற்போது, கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கின்றனர். அதேபோன்று, 2018-19ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தற்போது, கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்துள்ளனர். நடப்பு கல்வியாண்டான 2019-20ம் ஆண்டுக்கு மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர்.

விடுபட்ட 2 ஆண்டுக்கும் சேர்த்து, இந்தாண்டு, 3 பிரிவாக லேப்டாப்  அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதில் அரசாணை எண் 3ல் சில உத்தரவு போடப்பட்டுள்ளது. அதில், கடந்தாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் (2018-19), தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் (2019-20), மற்றும் தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்க வேண்டும். 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து, தற்போது, கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் கிடைக்காத அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதால், அவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, எங்களுக்கு லேப்டாப் வழங்குகள், பின் எதற்காக சான்றிதழில் லேப்டாப் விநியோகம் செய்யப்பட்டது என பதிவு செய்தீர்கள் என கேள்வி கேட்கின்றனர். அவர்களிடம் ‘பள்ளி கல்வித்துறை உத்தரவு. நாங்கள் ஏதுவும் செய்ய முடியாது’ என ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனை மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதனால் மாணவர்கள் மத்தியில் பிரச்னை எழுந்துள்ளது.

Tags : Students , completed Plus 2 , 2017-18 ,free laptop
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...