பொதுப்பணித்துறை அலட்சியத்தால் தூர்வாரப்படாத தண்டுரை ஏரி: விவசாயிகள் வேதனை

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தண்டுரை  ஏரி 108 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள மக்கள் 350 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர். பின்னர், நாளடைவில் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால், ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக, விவசாய தொழில் நலிவடைந்தது. பிறகு, அப்பகுதி விவசாயிகள் கிணற்றில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். தற்போது, கடுமையான வறட்சியால் கிணறு வற்றி விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வண்டலூர்- நெமிலிச்சேரி 400 அடி சாலை அமைக்கும்போது 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் தண்டுரை ஏரியில் இருந்து கையகப்படுத்தப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், ஏரியை சுற்றி வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். தற்போது ஏரியின் பரப்பளவு 50 ஏக்கர் கூட இருக்காது என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தண்டுரை ஏரியில், ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ள கழிவுநீர் விடப்பட்டு சமீபகாலமாக மாசடைந்துவிட்டது. மேலும், ஏரியிலிருந்து விவசாயத்துக்கு செல்லக்கூடிய கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்கிடையில் கடந்த 3 ஆண்டாக சரிவர மழை பெய்யாததால், தற்போது ஏரி முழுவதும் வறண்டு போய் பூமி வெடித்து காணப்படுகிறது. இதனால் ஏரியை சுற்றி வீடுகளில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதனால், ஏரிக்கு வரும் நீர் வரத்து அடியோடு முடங்கி போய்விட்டது.

தற்போது ஏரியில் தண்ணீர் இல்லாமல் வானம் பார்த்த பூமி போல் காட்சியளிக்கிறது. இதனையடுத்து, ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். மேலும், ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாயமான  நீர்வரத்து கால்வாய் கண்டுபிடித்து மீட்க வேண்டும்.இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே இருக்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமலும், குடியிருப்போர் நிலத்தடி நீர் ஆதாரம் இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இனிமேலாவது தண்டுரை ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
Tags : negligence , Public Works ,Department, Unstoppable ,Tondarai Lake
× RELATED உள்ளாட்சி தேர்தலின்போது மாற்றப்பட்ட...