சென்னை விமான நிலையத்தில் 40 லட்சம் தங்கம், கரன்சி பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹40 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் கரன்சி சிக்கியது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 8.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற சேகர் ஆண்டியப்பன் (44) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் இந்த விமானத்தில் சென்னை வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர் மலேசிய நாட்டில் உபயோகப்படுத்திய பழைய இட்லி தட்டு, மிக்சி போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். அதிகாரிகள் அதை தனித் தனியாக பிரித்து சோதனையிட்டனர். அப்போது, இட்லி எடுக்கும் கம்பி மற்றும் மிக்சி ஜாரில் உள்ள பொருட்கள் தங்கத்தில் இருந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து 370 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹13 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.  இதேபோல் நேற்று காலை 8.30 மணிக்கு குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அப்போது சென்னையை சேர்ந்த உமா மகேஸ்வரி (37), லட்சுமி தேவி (42) ஆகிய  2 பேர் குவைத்திற்கு சுற்றுலா பயணியாக சென்று சென்னை திரும்பி வந்தனர்.

 இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்களது உடமைகளை சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் பெண் சுங்க அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர்களது உள் ஆடைக்குள் 600 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹21 லட்சம். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.  தொடர்ந்து, நேற்று காலை 9.15 மணிக்கு இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை  விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். இதில் சென்னையை சேர்ந்த கவுசிக் (22) என்பவர் சுற்றுலா பயணி விசாவில் துபாய் செல்ல வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரது உடமைகளை தடவிப் பார்த்தனர்.  இதனால் அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சந்தேகம் தீராத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுங்க அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.   அவரது உள் ஆடைக்குள் கட்டு கட்டாக ₹6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.  அவற்றை பறிமுதல் செய்தனர். அவரது துபாய் பயணத்தையும் ரத்து செய்து கைது செய்தனர்.Tags : Chennai airport , 40 lakhs gold ,currency,Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம்...