×

தாம்பரம் கடப்பேரி பகுதியில் நடைபாதை, டீக்கடைகளில் மது விற்பனை

* பொதுமக்கள் அவதி * போலீசார் ‘கப்சிப்’

தாம்பரம்: தாம்பரம் கடப்பேரியில் நடைபாதை மற்றும் டீக்கடைகளில் மது விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாம்பரம் கடப்பேரி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் மெப்ஸ் வளாகம், பிரபல நகைக்கடை, மருத்துவமனைகள், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், தினமும் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் தாம்பரம், கடப்பேரி ஜிஎஸ்டி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்நிலையில், இப்பகுதி ஜிஎஸ்டி சாலையில் டாஸ்மாக் கடை (எண்:4450) அமைந்துள்ளது. இதையொட்டி அமைந்துள்ள பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் நள்ளிரவிலும், அதிகாலையிலும் ஏராளமான குடிமகன்கள் இங்கு குவிகின்றனர்.இதனால், அருகில் வசிக்கும் மக்கள் இரவில் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி இப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பலமுறை புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது மதுபாட்டில்களை பாரில் வைத்து விற்பனை செய்யாமல் அருகில் உள்ள ஓட்டல் மாற்று டீ கடையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் குடிமகன்கள் மற்றும் ஜிஎஸ்டி சாலையை நடந்து கடக்க முயற்சிக்கும் குடிமகன்கள் அவ்வழியாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகின்றது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘டாஸ்மாக் பாரை ஏலம் எடுத்துள்ள நபர், போலீசாருக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விடுவதால், 24 மணி நேர மது விற்பனையை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் இங்கு நள்ளிரவிலும் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனவே இங்குள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை இங்கிருந்து அகற்றவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்,’’ என்றனர்.



Tags : Wine shop ,tea shops ,sidewalk ,area ,Tambaram Kadaperi , Thambaram Kadperi , Wine sale,sidewalk, tea shops
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்