×

திருவொற்றியூர் பகுதியில் பன்றிகள் கடித்து 5 பேர் காயம்: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, தனியார் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் இந்த பன்றிகளை வீட்டில் வைத்து வளர்க்காமல் வெளியே திரிய விடுகின்றனர். இதனால் பன்றிகள் தெருவில் ஆங்காங்கே தேங்கும் குப்பையை கிளறி, அதில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் கால்வாய்களில் கூட்டமாக இறங்கி சகதியாக மாற்றுகின்றன. பின்னர், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுசம்மந்தமாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், சமீப காலமாக சாலையில் நடந்து செல்பவர்களை இந்த பன்றிகள் விரட்டி கடிப்பதால், பீதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த பிரியா (35) என்பவர் நேற்று முன்தினம் மாலை விம்கோ நகர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றபோது, தெருவோரத்தில் சுற்றிக்கொண்டிருந்த பன்றி, பிரியாவின் காலை கடித்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பன்றியை விரட்டினர். பிரியா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். பின்னர் மாநகராட்சி அதிகாரிக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். அவர்கள் புளுகிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் வந்து பன்றியை பிடித்து சென்றனர். இதேபோல், ரஞ்சித் என்ற சிறுவன் உள்பட 4 பேரையும் பன்றிகள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் ராஜாஜி நகர் அருகே உள்ள குப்பை கிடங்கு மற்றும் மக்கள் வசிக்கும் பல்வேறு தெருக்களில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுபற்றி கண்டுகொள்வதில்லை. மேலும் அதிகாரிகள் பன்றிகளை பிடித்தாலும், அதை புளு கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமே சமரசம் பேசி ஒப்படைத்து விடுகின்றனர். இதனால் மீண்டும் அந்த பன்றிகள் அந்த வழியாக செல்லும் மக்களை கடிக்கிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.


Tags : Thiruvottiyur , region , Thiruvottiyur, pigs bite, public fear
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்