கொரட்டூர் ஏரியில் நீர் வரத்தை அதிகரிக்க பசுமை திட்டு: பணிகள் தீவிரம்

அம்பத்தூர்: கொரட்டூர் ஏரியில் மழை காலத்தில் நீரை சேமிக்க பசுமை திட்டு அகழியை உருவாக்கும் முயற்சியில்  ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் இறங்கி உள்ளனர். இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து  ஊக்குவித்து வருகின்றனர். சென்னையை ஒட்டிய கொரட்டூர் ஏரி 850 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியை சுற்றி கொரட்டூர் அக்கிரகாரம், எல்லையம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, லேக் வியூ கார்டன்,   டி.வி.எஸ் நகர், சிவலிங்கபுரம், சுப்புலெட்சுமி நகர், அன்னை நகர், பாலாஜி நகர், சீனிவாசபுரம், காந்தி நகர், ராஜிவ் நகர், சிவகாமி நகர், கோபாலகிருஷ்ணன் நகர், திருமலை நகர் அம்பத்தூர் பகுதிகளான கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர், கருக்கு,  ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு, மாதானங்குப்பம்,  உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதியை சார்ந்த மக்கள் ஆரம்ப காலத்தில் கொரட்டூர் ஏரி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் ஏரியில் கழிவு நீர் கலந்து மாசடைய தொடங்கியது. குறிப்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள  100க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர், ஏரிக்கு செல்லும் மழை நீர் கால்வாயில் விடப்பட்டது. இந்த ரசாயன கழிவு நீர், கால்வாய்  வழியாக ஏரிக்கு வந்து கலந்தது. இதனால், ஏரி நீர் ரசாயனம் கலந்த நீராக மாறியது. இதில் வசிக்கும் மீன்களும் அடிக்கடி இறந்தும், நீரை அருந்தும் கால்நடைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகி வந்தன.

இதனையடுத்து கொரட்டூர் பகுதி சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்து பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுத்து நிறுத்தினர். மேலும், பல ஆண்டுகளாக ஏரியை ஆக்கிரமித்து இருந்த 650க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு  வீடுகளை கடந்த நவம்பர் மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தற்போது கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் கொரட்டூர் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது. இந்நிலையில், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஏரியில் மழை காலத்தில் அதிகளவு தண்ணீர் சேமிக்க ‘‘பசுமை திட்டு’’ அகழி உருவாக்க பொதுப்பணித்துறை அனுமதியுடன் புதிய முயற்சியை மேற்கொண்டு வரு    கிறது. இதற்காக, ஏரியின் ஒரு பகுதியில் மூன்று ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் 1.5 ஏக்கரில் வேம்பு திட்டும், மற்றொரு பகுதியில் இரண்டு ஏக்கர் இடத்தில், ஒரு ஏக்கர் அளவிற்கு குருவி திட்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.  இப்பணிக்காக, அங்கு இருந்த ஏராளமான சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வட்ட வடிவமாக அமைக்கப்படும் வேம்பு திட்டில் 25 அடி  இடைவெளியில் 3.5 அடி ஆழமும், 30 அடி அகலத்தில் அகழி   வெட்டப்படுகிறது.  அதிலிருந்து, எடுக்கப்படும் மண், திட்டு அமைக்க பயன்படுத்தப்படுகிறது. திட்டின் மையப்பகுதியில் 8 அடி ஆழம், 15 அடி சுற்றளவில் குளம் அமைக்கப்படுகிறது. அந்த குளத்தை சுற்றி, பறவைகளுக்கான வேம்பு, ஆலமரம், அரச மரம், புங்கன்,  நாவல், கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இந்த பசுமை திட்டுகளை அமைக்க, பொதுப்பணித்துறை ஒரு மாதம் அனுமதி வழங்கி உள்ளது.  ஆனால், இந்த பசுமை திட்டு திட்டம்  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கலிடம்  பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதற்காக அவர்கள்,  தங்களால் இயன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும்  கொரட்டூர் பாதுகாப்பு மக்கள் இயக்கத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்த பணியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி ஊக்குவிக்கின்றனர்.

பறவைகளுக்கு அடைக்கலம்

ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளுக்கு  அருகே அதிக அளவில் மரம் வளர்க்கப்பட்டால், மழை பெறுவதுடன், கோடை காலத்தில்  தண்ணீர் வேகமாக ஆவியாவதை தடுக்க முடியும். மேலும், மரங்களின்றி நீர்  நிலைக்கு அருகில் உள்ள மின்  வயர்களில் அமரும் பறவைகள் ஏதாவது ஒரு வகையில்  பலியாகின்றன. மரங்கள் வளர்க்கப்பட்டால்,  அது போன்ற பலி தடுக்கப்படும்.  குருவி திட்டு, செவ்வக வடிவில் அமைக்கப்படுகிறது வருங்காலத்தில் அந்த பசுமை  திட்டுகள், பறவை  இனங்களில் புகலிடமாக அமையும். மேலும், வேம்பு திட்டு  அகழியில் மட்டும் கூடுதலாக, 45 லட்சம் லிட்டர் தண்ணீரும், குருவி  திட்டில்  25லட்சம் லிட்டர் தண்ணீரை கூடுதலாக சேமிக்க முடியும்.

Related Stories:

More
>