×

19 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பணி சுணக்கம்: மழை தொடங்குவதற்கு முன் முடிப்பதில் சிக்கல்

திருவொற்றியூர்: புழல் ஏரியில் இருந்து ஆமுல்லைவாயல் வரை 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள உபரி நீர் கால்வாயை சீரமைக்க ₹19 கோடியில் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாகியும் முடிக்கப்படாமல் மந்தகதியில்  நடைபெற்று வருகிறது.  சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் புழல் ஏரியும் ஒன்று. மழை காலத்தில் செங்குன்றம், புழல், பம்மதுகுளம், ஒரகடம், அம்பத்தூர், திருமுல்லைவாயல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் புழல் ஏரியில் தேங்கும்.  அதிக மழை பெய்யும் போது, புழல் ஏரி நிரம்பி மதகு வழியாக உபரி நீர் வெளியேறும். இது, கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம் ஆகிய பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உபரிநீர் கால்வாய் வழியாக சென்று எண்ணூர் முகத்துவார ஆற்றில் கலக்கிறது.   இந்த உபரி நீர் கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்து சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் சிதிலமடைந்து உள்ளது. இதனால்  மழைக்காலத்தில் ஆர்ப்பரித்து வரும் உபரிநீர் கால்வாயில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.  

கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையின் போது இந்த கால்வாய் கரைகள் உடைந்து காணப்பட்டதால், உபரிநீர் அருகில்  உள்ள ஏராளமான வீடுகளுக்குள்  புகுந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இதையடுத்து இந்த உபரி நீர்  கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து ₹19 கோடி செலவில் புழல் ஏரியில் இருந்து ஆமுல்லைவாயல் தரைப்பாலம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உபரி நீர் கால்வாயை தூர்வாரி, கரைகளை சீரமைக்க அரசு  திட்டமிட்டு, இதற்கான பணிகள் கடந்த சில  மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.ஆனால் அந்த பணிகளை துரிதமாக முடிக்காமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர். இதனால், மழைக்காலத்திற்குள் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கால்வாயில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து  தூர்ந்துள்ளதால், வரும் மழை காலத்தில் உபரி நீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் மீண்டும் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளதால் மழைக்காலத்தில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர்  கால்வாயில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்  புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.




Tags : 19 crores , Pullei Lake ,Work Problem
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...