×

உளவு விமானத்தை தாக்கியதற்கு பதிலடி ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

வாஷிங்டன்: உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஈரானுடன் கடந்த 2015ல் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை  அமெரிக்கா விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் மீதும் தடை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்தது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் நாட்டு வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் பதில் தாக்குதலுக்கு  தயாரானதால் பதற்றம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் இத்தாக்குதலை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

ஆனால், ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ராணுவ சைபர் படைகள் சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகூறுகையில், ‘‘ஏவுகணை மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ராணுவ கம்ப்யூட்டர் அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பு  சேதமடைந்துள்ளது. இத்திட்டம் அதிபர் டிரம்ப்பிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு நடத்தப்பட்டதாகும். இதற்காக கடந்த சில வாரங்கள் திட்டமிடப்பட்டது’’ என்றார்.அமெரிக்காவின் சைபர் தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.



Tags : US ,cyber attack ,Iranian ,spy plane attack , Retaliation ,attacking,Iranian military, computer
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...