×

தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பற்றி வேறு டாக்டரிடம் ஆலோசிக்க நோயாளிகளுக்கு உரிமை உண்டு

* தேசிய கவுன்சில் அதிரடி பரிந்துரை
* மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி வேறொரு டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தவும், கருத்துகளை பெறவும் நோயாளிகளுக்கு உரிமை உண்டு. இந்த பரிந்துரையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்’ என மத்திய  சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.மருத்துவமனைகள், டாக்டர்களிடம் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி வேறொரு டாக்டரிடமோ, மருத்துவமனையிடமோ ஆலோசனைகள் நடத்த சம்பந்தப்பட்ட டாக்டர்கள், மருத்துவமனைகள்  அனுமதிப்பது கிடையாது. அப்படி ஆலோசிப்பதற்காக சிகிச்சை ஆவணங்களை கேட்டாலும் கொடுப்பது கிடையாது. இதனால், நோயாளிகள் தங்களுக்கு உள்ள நோய் பற்றியோ, சிகிச்சை பெறுவது பற்றியோ மாற்று கருத்துகள் கேட்க முடியாத  நிலை உள்ளது. நோயாளிகளுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஆராய்ந்த, தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தயாரித்தது. நோயாளிகளுக்கு உள்ள உரிமைகள் பற்றி அதில் பல்வேறு பரிந்துரைகளை செய்து, மத்திய  சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது. இதை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட சுகாதார அமைச்சகம், இது பற்றி பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பிடம் ஆலோசனைகள் கேட்டது. அப்போது, நாடு முழுவதும் மருத்துவமனைகள்  செய்யும் முறைகேடுகள், தில்லுமுல்லு பற்றி மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது குறித்து மருத்துவமனைகளுக்கான தேசிய கவுன்சிலின் 11வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன் பின் நோயாளிகளும்,  மருத்துவமனைகளும் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என இரண்டு வகையான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் விவரம்:
* சிகிச்சை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம், விசாரணை அறிக்கை, விரிவான ரசீதுகள், ஒவ்வொரு சேவை மற்றும் வசதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் நோயாளிகள் அல்லது  அவர்களின் குடும்பத்தினரிடம் கட்டாயம் வழங்க வேண்டும்.
* நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் முன்பாகவும், சிகிச்சை அளிக்கும் முன்பாகவும் அவரிடம் அதை பற்றி விளக்கி ஒப்புதல் பெற வேண்டும். இதுபோன்ற நேரத்தில், சிகிச்சை பெறும் நோயாளிகள் அல்லது அவர்களின் குடும்ப   உறுப்பினர்களுக்கு, சிகிச்சை குறித்த வேறு மருத்துவ நிபுணரிடம் மாற்று ஆலோசனைகள் பெற முழு உரிமை உள்ளது.
* மருத்துவ சிகிச்சை ஆவணங்களை எப்போது கேட்டாலும், கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் வழங்க வேண்டும்.
* நோயாளிகள் பெறும் சிகிச்சை பற்றிய விவரங்கள் தொடர்பான ரகசியத்தை டாக்டர்கள் காக்க வேண்டும்.
* எச்ஐவி நோயாளிகள் உட்பட எல்லா வகையான நோயாளிகளுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோல், பல்வேறு பரிந்துரைகளை மருத்துவமனைகளுக்கான தேசிய கவுன்சில் செய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது. இவற்றை எல்லா மருத்துவமனைகளும் பின்பற்றுவதை உறுதி செய்யும்படி மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுந்தன்  உத்தரவிட்டுள்ளார்.  இதுவரை 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த பரிந்துரைகளை அமல்படுத்தி உள்ளன. மற்ற மாநிலங்களும் விரைவில் அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது பெண் நோயாளிகளுடன் ஒருவர் இருக்க வேண்டும்மருத்துவமனைகளுக்கான தேசிய கவுன்சில் செய்துள்ள பரிந்துரைகளில் முக்கியமானதாக, ‘பெண் நோயாளிகளை ஆண் டாக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அருகில் ஒரு பெண் இருப்பதை உறுதி செய்ய  வேண்டும்’ என்பது உள்ளது. இதை கட்டாயம் பின்பற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : doctor , Regarding ,treatment , right ,o consult another ,doctor
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...