தென்மேற்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை

சென்னை: தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதியில் இருந்து காற்றும் வீசி வருவதால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தம்  உருவாகியுள்ளதாலும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வங்கக் கடல் பகுதியிலும் வளி மண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், உள்  மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, நடுவட்டம், தோவாளை ஆகிய இடங்களில் 40 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை 30 மிமீ, சத்தியபாமா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம், குன்னூர் 20 மிமீ,  தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, தரமணி, பெரும்புதூர், பெரியாறு, சென்னை விமான நிலையம், காவேரிப்பாக்கம் 10 மிமீ பெய்துள்ளது.

இதற்கிடையே, வேலூர், திருத்தணி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், மதுரை  ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், படிப்படியாக தமிழகத்தில் வெயில் குறைந்து  வருவதாலும், வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை,  தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


Tags : districts ,Tamil Nadu , Southwest ,monsoon , Rainfall
× RELATED டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட...