மக்களவையில் பாஜ வழங்க முன் வரும் துணை சபாநாயகர் பதவி வேண்டாம்: ஒய்எஸ்ஆர் காங். திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களவை துணை சபாநாயகர் பதவி எங்களுக்கு வேண்டாம்’ என ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜ எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்பதவியை நாடாளுமன்றத்தின் 4வது  பெரிய கட்சி என்ற அடிப்படையில் 22 எம்பி.க்களை கொண்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வழங்க, பாஜ மேலிடம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்பதவி வேண்டாம் என அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான  ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே மறுத்துள்ளார்.இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘
துணை சபாநாயகர் பதவி தருவதாக நேரடியாகவோ, தனிப்பட்ட முறையிலோ எங்களை யாரும் அணுகவில்லை. ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எங்களை பொறுத்த வரையில் துணை சபாநாயகர் பதவியை ஏற்க  விரும்பவில்லை.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காதவரை மத்தியில் ஆளும் கட்சியுடன் பதவியை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை. அதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரசுடனும் நாங்கள் நெருங்க விரும்பவில்லை.  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரஸ்தான் காரணம். எனவே, ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என இருவரிடம் இருந்தும் விலகியே இருக்க விரும்புகிறோம். எங்கள் இந்த நிலைப்பாட்டை பாஜ தலைமையிடத்திடம்  ஏற்கனவே தெரிவித்து விட்டோம்,’’ என்றார். ‘துணை சபாநாயகர் பதவியால் எந்த பயனும் இல்லை. மேலும், பாஜ அரசுக்கு ஆதரவான கட்சி என தேவையின்றி பெயர் கிடைப்பதை ஜெகன் விரும்பவில்லை’ என்பதால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இப்பதவியை ஏற்க மறுப்பதாக அக்கட்சி  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.× RELATED மக்களவை துணை சபாநாயகர் பதவி சிவசேனா...