×

புயல் நிவாரணம் வழங்காமல் மோசடி தென்னை மரங்களுக்கு அஞ்சலி விவசாயிகள் நூதன போராட்டம் : முத்துப்பேட்டை அருகே பரபரப்பு

முத்துப்பேட்டை : கஜா புயல் நிவாரணம் வழங்காமல் மோசடி  செய்த அதிகாரிகளை கண்டித்து தம்பிக்கோட்டையில் புயலால் சாய்ந்த தென்னை  மரத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த  தம்பிக்கோட்டை பகுதிதான் தமிழகத்தில் தென்னை சாகுபடியில் முதலிடமாகும்.  இந்த  பகுதியில் தென்னை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லட்சக்கணக்காண மரங்களை  பராமரித்து வந்தனர். கடந்த ஆண்டு  நவம்பர்  15ம் தேதி தாக்கிய கஜா புயலின்  கோரதாண்டவத்தால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள்  அடியோடு சாய்ந்தது. இதனால் தங்களது  வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தவித்தனர். கஜா புயல் பாதிப்பு  ஏற்பட்டு மாதங்களை கடந்தும் முத்துபேட்டையில் சேதமான தென்னை மரங்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை. மாறாக தென்னை மரங்களே இல்லாதவர்களுக்கும், சவுக்கு   சாகுபடி செய்தவர்களுக்கும் தென்னை மரங்கள் இருந்து விழுந்ததாக கூறி வருவாய்த்துறையினர் நிவாரணம்  வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த தம்பிக்கோட்டை கீழக்கோட்டை   தென்னை விவசாயிகள்,  மோசடியில் ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும்  வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று கஜா புயலில் விழுந்து கிடக்கும் தென்னை  மரங்களுக்கு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தி நூதனப்போராட்டதில்  ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘8 மாதங்களாகியும்  இதுநாள்வரை நிவாரணம் கிடைக்கவில்லை. தற்போது வெளியான பயனாளிகள்  பட்டியலில் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. விரைவில் கலெக்டரை   சந்தித்து முறையிட இருக்கிறோம். அதில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் விரைவில்  நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்’’ என்றார்.

Tags : New farmers struggle ,fraudulent, coconut trees without storm relief
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...