×

பாதிக்குப்பாதி பற்றாக்குறையால் பாதிப்பு உருக்குலைகிறதா குடிநீர் வாரியம்?

* 50% காலி பணியிடத்தால் பணிகள் பாதிப்பு
* 554 கூட்டுக்குடிநீர் திட்டங்களில் குளறுபடி
* தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதுவும் காரணம்

மதுரை: குடிநீர் வாரியம் 50 சதவீதத்திற்கும் மேல் பணியாளர் பற்றாக்குறையால் உருக்குலைந்து, காவிரி உள்பட 554 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் குளறுபடியாகிறது. 57 நிர்வாக பொறியாளர் பணி உயர்வில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி பேரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
குடிநீரின்றி மனிதனின் தினசரி வாழ்வு இல்லை. பருவமழை தாமதித்தாலும் அத்தியாவசியமான குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையுடன் 1971ல், அதாவது 48 ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்நாடு குடிநீர் வாரியம்’ உருவாக்கப்பட்டது. அந்த வாரியம்  உருக்குலைக்கப்பட்டு தேய்ந்து கொண்டே போவதும் இன்றைய குடிநீர் திண்டாட்டத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
குடிநீர் ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்குதல், இதனை பொதுசேவை நிதிநிறுவனங்களில் இருந்து நிதியுதவி பெற்று செயல்படுத்துதல், தொடர்ந்து பராமரித்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல் போன்ற உயரிய நோக்குடன் தன்னாட்சி அதிகாரம் மிக்கதாக இந்த வாரியம் அமைக்கப்பட்டது.
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் 554 கூட்டுக்குடிநீர் திட்டங்களை உருவாக்கி 8 மாநகராட்சி, 66 நகராட்சி, 324 பேரூராட்சி, 47 ஆயிரத்து 136 கிராமப்புற குடியிருப்பு, 532 தொழிற்சாலை உள்ளிட்ட இதரவகைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. இதன்மூலம் 4 கோடியே 23 லட்சம் மக்களுக்கு அன்றாடம் 2 ஆயிரத்து 703 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், தற்போது எழுந்துள்ள குடிநீர் பற்றாக்குறையால் 1,803 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டும் விநியோகம் செய்ய முடிகிறது.

8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய வாரியத்தில் படிப்படியாக பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர் நியமனம் செய்யப்படவில்லை. அரசு கணக்கின்படி 6 ஆயிரத்து 754 ஊழியர் கட்டாயம் என்பது குறியீடாகும். ஆனால், தற்போது 3 ஆயிரத்து 91 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். 3 ஆயிரத்து 663 பணியிடம் காலியாக உள்ளது. குடிநீர் திட்டங்களை பராமரிக்க தொழில்நுட்ப ரீதியாக தேவைப்படும் 413 எலக்ட்ரீசியன்களில் 233 பேரும், பிட்டர்கள் 365 பேருக்கு 178 பேரும், பராமரிப்பு உதவியாளர் 1,097 பேருக்கு 676 பேரும் மட்டுமே உள்ளனர். குடிநீர் திட்டங்களை ஆய்வு செய்து நிர்வகிக்க தேவையான பொறியாளர் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது. இதனால், குடிநீர் தேவைக்கேற்ப புதிய குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து, உருவாக்க முடியாமலும், ஏற்கனவே உருவாகி பயன்பாட்டிலுள்ள 554 கூட்டுக்குடிநீர் திட்டங்களை பராமரித்து குடிநீர் வழங்க முடியாமலும் மூச்சு திணறுகிறது.

குடிநீர் வாரியத்தில் 50 சதவீதம் பணியிடம் காலியாக இருந்தும் அதற்கு புதிய ஊழியர் நியமிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால், தற்போது பணியாற்றும் பொறியாளருக்கு பணி உயர்வு வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. 72 நிர்வாக பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதில் 57 நிர்வாக பொறியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் பதவி உயர்வு வழங்க பேரம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு குடிநீர் வாரிய தொழிலாளர் சம்மேளன (ஏஐடியுசி) மாநில கவுரவத்தலைவர் கே.கே.என்.ராஜன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்துக்கு குடிநீர் வாரியத்துக்கு புதிய ஊழியர் நியமிக்காமல் உருக்குலைப்பது முக்கிய காரணமாகும். இதேநிலை நீடித்தால் வாரியத்தை மூடும் அபாயம் ஏற்படும். இந்த வாரியத்தை உள்ளாட்சி துறையிடம் இருந்து தனியாக பிரித்து முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலமே காக்க முடியும். தவறினால் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம், வரும்காலங்களில் கோரத்தாண்டவத்துக்கு வழிவகுக்கும்’’ என எச்சரித்தார்.

Tags : Drinking Water Board , Drinking Water Board?
× RELATED டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!