அதிமுக எம்பி வைத்திலிங்கம் பேச்சால் மக்கள் அதிர்ச்சி நீரின்றி அமையாது உலகு என்று சொன்னது அவ்வையாராம்

பட்டுக்கோட்டை: நீரின்றி அமையாது உலகு என்று சொன்னது அவ்வையார் என்று அதிமுக எம்பி வைத்திலிங்கம் பேசினார். இதற்கு மேடையிலேயே இருந்த தஞ்சை கலெக்டரும் ஆமாம் சாமி போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டு குரும்பக்குளம் பகுதியில் சமூகநல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின்கீழ் வாட்டர் ஏடிஎம் என்னும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், ‘இந்த வாட்டர் ஏடிஎம் என்னும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் முதலாவதாக செயல்படுத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் முறையாக பாதுகாக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து, தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பேசும்போது, ‘‘நீரின்றி அமையாது உலகு என்று சொன்னார் அவ்வையார்’’ என்று கூறிவிட்டு, மேடையிலிருந்த கலெக்டர் அண்ணாதுரையை பார்த்து சரியா? தவறா? என்று கேட்டார்.

உடனே கலெக்டரும் சரிதான் என கூறி சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார். இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நீரின்றி அமையாது உலகு என்ற வரிகளை சொன்னது திருவள்ளுவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதிமுக அமைச்சர்களும், எம்.பி.க்களும் மேடைகளில் பொதுஅறிவின்றி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கனவே, கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று முதல்வர் தெரிவித்தார். இதற்கு கண்டனம் எழுந்தது.  தற்போது, திருவள்ளூவர் சொன்னதை அவ்வையார் சொன்னதாக அமைச்சர் பேசி உள்ளார். இதற்கு கலெக்டரும் ஆமாம் போட்ட சம்பவம்தான்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,Vythilingam , People are shocked ,AIADMK MP Vythilingam speech
× RELATED ஏமாற்றுவதையே கொள்கையாக...