ஏரிகளை எல்லாம் அரசே ஆக்கிரமித்து கொண்ட கொடுமை : ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னையில் 20க்கு மேற்பட்ட ஏரிகள் இருந்தன. இந்த ஏரிகளை  எல்லாம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டிவிட்டனர். இவற்றில் பல ஏரிகளை அரசு மற்றும் அரசு அதிகாரிகள் ஆக்கிரமித்து அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கட்டி கொண்டது தான் கொடுமை.  இந்த ஆக்கிரமிப்புகளால் நீர் வழிப்பாதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. மழைநீர் சேமித்து வைக்க வழி இல்லாமல் தண்ணீர் அனைத்தும் கடலில் கலந்து விட்டது. இதன் காரணமாகத்தான் நம்மால் ஒரு சொட்டு தண்ணீரை கூட சேமிக்க முடிவில்லை. இதற்கிைடயில் நிலத்தடி நீர் திருட்டும் அதிகரித்து கொண்டே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் ஆழ்துளை கிணறு தோண்டினால் 100 அடியில் தண்ணீர் கிடைக்கும். தற்போது 400 அடி வரை ஆழ்துளை கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் பிரச்னையானது சென்னை உயர்நீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.  உயர்நீதிமன்றத்திற்கு குடிநீர் வாரிய லாரிகளும் மூலம்  தண்ணீர் விநியோகம் செய்யப்படும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரிகள்  மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில்  கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.  

தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி  வெளியிட்டு கொண்டே இருந்தன. இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க உரிய உத்தரவை பிறப்பிக்ககோரி  நான் முறையீடு செய்தேன். தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பிறகுதான் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. நீதிமன்றம் தலையிடாத வரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இவ்வாறு தங்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாத நிலை இருக்கும் போது பொதுமக்கள் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டேதான் உள்ளனர். இதைப்போன்றுதான் தண்ணீர் பிரச்னையும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

2015 ம் ஆண்டு சென்னை பெரும் வெள்ளம் தொடர்பான வழக்குகள் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது சென்னையில் உள்ள நீர்நிலைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், இயற்கையை நாம் அழித்தால் நம்மை இயற்கை அழித்துவிடும் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்தை அரசு கேட்கவே இல்லை என்பது தற்போது நிருபணம் ஆகி உள்ளது.  தற்போது உயர்நீதின்ற நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தார். இவற்றை நிறைவேற்றவும் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

இவ்வாறு உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தபிறகும் தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ெமத்தனமாகத்தான் செயல்பட்டது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத போது உயர்நீதிமன்றம் அதில் தலையிடத்தான் செய்யும். இதைப்போன்று அரசின் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றம் தொடர்ந்து தலையிட்டு கொண்டே இருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று ஏன் இருக்க வேண்டும். அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்திவிடலாம்.


Tags : tyranny ,George Williams ,lake ,High Court , Cruelty, state occupies ,lakes
× RELATED பழவேற்காடு ஏரியில் மீனவர் படகில் இருந்து தவறி விழுந்த உயிரிழப்பு