மழைநீரை சேமிப்பதில் பொறுப்பில்லை ஒதுக்கீட்டிலோ ஊழல் : சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்

குடிநீர் என்பது மக்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. மற்ற அத்தியாவசிய பொருட்களை காட்டிலும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. சாப்பாடு இல்லாமல் இரண்டு நாள் இருந்து விடலாம், மாசுபட்ட காற்றை சுவாதித்து சில நாள் வாழ்ந்து விடலாம். குளிக்காமலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. தண்ணீர் தான் மனிதனின் உயிர்நாடி. அரசு தன்னுடைய பொறுப்பற்ற செயலால், மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை எல்லாம் வீணடித்துவிடுகிறது. கடலில் கலப்பதை தடுக்க முறையான வழிமுறைகள் ஏதும் செய்வதில்லை. ஏரி, குளங்களை தூர் வாருவதாகவும், நீர் ஆதாரங்களை சேமிப்பதற்காகவும் ஆயிரம் கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்படுகிறது. ஆனால், அந்த பணத்தையெல்லாம் ஊழல் செய்துவிடுகின்றனர். அரசின் மிகப்பெரிய ஊழல் என்றால் நீர் நிலைகளை தூர் வார ஒதுக்கப்படும் பணத்தில் செய்யப்படுவது தான். 99 சதவீத பணம் ஊழல் செய்யப்படுகிறது. தூர் வாருவதாக கூறி ஊழல் செய்து விடுகின்றனர். குறிப்பாக கூவம் தூர் வாரப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி 10 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் தூர் வாரியுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள் அந்த மண் மலையை எங்கே வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அரசு தூர் வாரியதாக கணக்கு காட்டும். ஆனால் தூர் வாரமாட்டார்கள், நீதிமன்றம் கேட்டால் மழை வந்து மீண்டும் அங்கே போய் அடைச்சுக்கிச்சுனு சொல்லுவாங்க. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றால் இந்த துறைக்கு பொருந்தும்.

 அரசு தனது கடமை செய்ய தவறும்போது, நீதிமன்றம் தலையிட முழு உரிமை உள்ளது என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவு போட்டுள்ளார். நீதிமன்றம் முறையாக கணக்கு கேட்கலாம், பிரச்னையை தீர்க்க நிபுணர்குழுவை அமைக்கலாம். நீர் ஆதாரத்தை பெருக்க மக்களுக்கு ஆலோசனைகள் தரலாம். எனவே அத்தனையும் நீதிமன்றம் செய்யலாம். அடிப்படை பிரச்னைக்காக நீதிமன்றத்தை மக்கள் அணுகுவதிலும் எந்த தவறும் கிடையாது.
டெங்கு தொடர்பாகவும் குழு அமைக்கப்பட்டது. கங்கையை சுத்தம் செய்ய குழு அமைக்கிறார்கள் இவைகளையெல்லாம் அரசு தான் செய்யும். ஆனால் நீதிமன்றம் தான் மேற்பார்வை செய்யும். உடனடியாக தண்ணீர் பிரச்னையை தீர்க்க, எத்தனை நீர்நிலைகளை தூர் வாரினீர்கள். வாருவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள், என்றெல்லாம் மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல் வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும், தூர் வார வேண்டுமென உத்தரவிட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனையும் நீதிமன்றம் மேற்பார்வை செய்கிறது.

நானே கிருஷ்ணா நதி தண்ணீரை தமிழக அரசு கேட்டு வழங்க வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளேன். தண்ணீர் பிரச்னைகளை போக்க போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க  நிபுணர் குழுக்களை அமைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம். இதனை நீதிமன்றம் மேற்பார்வை செய்யலாம்.2015 வெள்ளம் வந்தபோது அந்த தண்ணீரை சேர்த்து வைக்காதது தொடர்பாக நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. தண்ணீர் பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசியல் வாதிகள் லாரி வைத்துக்கொண்டு தண்ணீர் வியாபாரம் செய்து வருகின்றனர். அரசு தண்ணீர் பிரச்னையை தீர்க்காது. ஒருவகையில் இது செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட தண்ணீர் பிரச்னை ஆகும்.

× RELATED திருமணம் ஆகும் வரை மகள்களை பராமரிக்க...