×

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் மருத்துவ கண்காட்சியில் மக்கள் திரண்டனர்

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கண்காட்சியை பார்வையிட்டனர். தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் சர்வதேச மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, நியூட்ரா பாக்ஸ், எத்னிக் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஹெல்த் அண்டு பிட்னஸ் - 2019” என்ற மாபெரும் மருத்துவ கண்காட்சியை 2 நாட்களாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தியது. மருத்துவ கண்காட்சியை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களான ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ். அசோகன், நியூட்ரா பாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிகர் தேசாய், எத்னிக் ஹெல்த்கேர் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் யோக வித்யா, மிஸ்டர் வேல்டு எம்.அரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தினகரன் நாளிதழின் மார்க்கெட்டிங் தலைமை பொதுமேலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

இந்த கண்காட்சியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, யுனானி, அக்குபஞ்சர் மருத்துவமனைகளின் அரங்குகள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், வாசனை திரவியங்கள், மருத்துவ உணவுப் பொருட்கள், மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கண்காட்சியை பார்வையிட்டு மருத்துவ கண்காட்சியில் உள்ள பல்வேறு அரங்குகளுக்கு சென்று உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இரண்டாவது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக மருத்துவக் கண்காட்சிக்கு வருகை தந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடல் பரிசோனை செய்து கொண்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற கண்காட்சியில் ஆணழகன் போட்டி மற்றும் கட்டுடல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு ஆணழகன் போட்டியில் முதல் 15 பேரும், கட்டுடல் போட்டியில் முதல் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ேமலும், இந்த கண்காட்சியில் லென்ேகா நிறுவனம் சார்பில் மருத்துவக் கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு குலுக்கல் முறையில் சுவர் கடிகாரம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. அதைப்போன்று பைசன் நிறுவனம் சார்பில் 5 பொருட்கள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் ஆர்கானிக் வகையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், சத்து மாவு, குளிர்பானங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும் மருத்துவ முறையில் பர்னிச்சர் நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட  உடல் சோர்வை போக்கக் கூடிய  கட்டில்கள், மெத்தைகள், சேர்கள் போன்றவற்றை வாங்குவதற்கு முன்பதிவு செய்து கொண்டனர்.

அதைப் போன்று உச்சி முதல் பாதங்கள் வரை வலிகளை போக்க கூடிய மசாஜ் சாதனங்களும், உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் புரோட்டின் பவுடர்கள் மூலம் சீராக்க கூடிய ஊட்டசத்து பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. அதை பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. காலை வந்த மக்கள் கூட்டத்தை விட மாலையில் அதிகமான மக்கள் வருகை வந்து மருத்துவ ஆலோசனை பெற்று உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags : trade center ,Nandambakkam , Nandambakkam Trade Center , Dinakaran Newspaper
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...