×

சர்வர் வேலை செய்யவில்லை, கம்ப்யூட்டர் இயக்குவதில் சிக்கல் கணினி ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி

சென்னை:  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் (கிரேடு1) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வில் சில இடங்களில் சர்வர் வேலை செய்யாமல்போனதால் பலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். இதையடுத்து, வேறு ஒரு தேதியில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர்(கிரேடு1) பணியிடங்களுக்கான முதுநிலை ஆசிரியர்களை  நேரடியாக நியமிப்பதற்கான போட்டித் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்தனர்.   அவர்களில் 7545 பேர் ஆண்கள், 23 ஆயிரத்து 286 பேர் பெண்கள். மாற்றுத் திறனாளிகள் 322 பேர். இத்தேர்வு தமிழகம் முழுவதும் மொத்தம் 119 தேர்வு மையங்களில் நடந்தது. சென்னையில் 3 தேர்வு மையம் அமைக்கப்பட்டது. தேர்வு எழுதும் கணினி பயிற்றுநர் ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.  ஆனால் பலரால் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கேட்டதற்கு சர்வர் பிரச்னை என்று தெரிவித்தனர்.  இப்படி பல்வேறு பிரச்னைகளுடன் கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது.

இது தவிர, கணினி பயிற்றுநர் தேர்வுக்கான மையங்கள் பெரும்பாலும் தனியார் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தனியார் தேர்வு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். அதனால் தவறு நடக்க வாய்ப்பில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார்.  இந்நிலையில், நேற்று நடந்த கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வில் 119 மையங்களில் சில மையங்களில் தான் கணினிகள் சரியாக வேலை செய்தன. பெரும்பாலான இடங்களில் கணினிகள் வேலை செய்யவில்லை. அதனால் தேர்வு எழுத சென்றவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர். திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கணினி வேலை செய்யவில்லை. அதனால் தேர்வு எழுதச் சென்றவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பதற்றம் உண்டானது. மதியம் 2 மணிக்கு மேல் அவர்களை தேர்வு எழுத வைத்தனர். மாலை 5 மணி வரை தேர்வு நடந்தது. இதேபோல நெல்லை மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 742 பேர் தேர்வு எழுத கணினி வசதியுடன் கூடிய 4 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 4வது மையமான நெல்லை மாவட்ட எல்லை அருகே லெவஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 301 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு 21 பேருக்கு தேர்வு எழுத வழங்கப்பட்ட கணினி சரியாக செயல்படவில்லை. கணினி பழுதடைந்ததால் அவர்கள் தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்வு தொடங்கி நீண்ட நேரம் ஆகியும் பழுதான கணினிகளை சீராக்க முடியவில்லை. இதனால் தேர்வு எழுதி வந்தவர்கள் தேர்வுக்கூடத்தை விட்டு வெளியேறினர். அவர்களுடன் வந்திருந்த உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். தேர்வுக்கூட பொறுப்பு அலுவலராக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்த அலுவலர் தங்கமாரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ் மற்றும் அலுவலர்களுடன் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். பின்னர் பிற்பகலில் விடுபட்ட 21 பேருக்கும் வேறு கணினிகள் கொடுத்து தேர்வு எழுத வைத்தனர். கணினி குளறுபடி ஏற்பட்ட இந்த மையத்தில் மட்டும் 46 பேர் தேர்வு எழுதவில்லை. 4 மையங்களிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் தேர்வு எழுதவில்லை.

இதுபோல பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டதால் பலர் தேர்வு எழுத முடியாமல் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வு எழுதாமல் திரும்பியவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு நடத்தப் போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கணினி ஆசிரியர் கிரேடு1க்கான தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 119 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வில் 30 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் முதன் முறையாக கணினி வழியில் தேர்வு நடத்துகிறது. இதனால் பெரும்பாலான மையங்களில் எந்தவித இடர்பாடும் இன்றி இந்த தேர்வு நடந்தது. ஒரு சில மையங்களில் ஒரு சில ஆய்வகங்களில் கணினி தொழில் நுட்ப கோளாறு காரணமாக  சிலர் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. எனவே தேர்வு மையத்துக்கு வந்து கணினி தேர்வில் பங்கு கொள்ளாதவர்களுக்கும், தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும்  வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடக்கும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த விவரங்கள் அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமும், இ மெயில் மூலமும் விரைவில் அனுப்பி வைக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மைய விவரங்க்ள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத, 3400 மாணவ-மாணவியருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், ஹால் டிக்கெட் கொடுத்திருந்தது. திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மையத்தில், காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. தேர்வு நடைபெற்று கொண்டிருந்த போது, ஆன்லைனில் சர்வரில் குளறுபடி ஏற்பட்டது. ஆன்லைனில் தோன்றிய கேள்விகள் திடீரென மறைந்தது. இதன் காரணமாக போட்டியாளர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக சர்வர் வேலை செய்யாததால், தேர்வுக்கு வந்தவர்கள் மையத்தை விட்டு வெளியேறினார்கள். பின்னர், அவர்கள் திருச்செங்கோடு- ஈரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய அதிகாரிகள் ஆன்லைனில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வினை நடத்த முடியவில்லை. இதனால், வேறொரு நாளில் தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்வு எழுத வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Tags : Server is not working , Computer teachers ,messing with the exam
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...