×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 கி.மீ.க்கு மனித சங்கிலி

* மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை நடந்த போராட்டத்தில் விவசாயிகள், கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுளளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் (ஹைட்ரோ கார்பன், எண்ணெய் குழாய் பதிப்பு, 8 வழிச்சாலை) செயல்படுத்த மாட்டோம் என்று அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்தனர். இதேபோல், பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர், நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். ஆனால், தேர்தல் முடிந்த அடுத்த நாளே ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு பணிக்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருவதோடு, இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. எனவே, இந்த திட்டத்ைத ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 1-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 6, 7, 8ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
இந்தநிலையில், பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரையோரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கடந்த 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தராததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி அளித்தது.

அதன்படி நேற்று மாலை 4 மணியளவில் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை 600 கி.மீ. நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மரக்காணம் ஈ.சி.ஆர். சாலையில் தொடங்கிய போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கடலூரில் நடந்த பேரணியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் இருந்து புத்தூர் அண்ணா சிலை வழியாக பாப்பாக்கோயில் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டையில் தொடங்கி முத்துப்பேட்டை வரையில் 30 கி.மீ. தூரத்துக்கு நடந்த பேரணியில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்புகள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முத்துப்பேட்டை-கோவிலூர் பைபாஸ் கிழக்கு கடற்கரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி பைபாஸ் ரவுண்டா அருகில் இருந்து துவங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன், திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை வகித்தார். தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன், தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் மற்றும் மீனவர் சங்கங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.பி.பட்டினம், தொண்டி, உப்பூர் போன்ற ஊர்களிலும், மனிதச் சங்கிலி முடிவடையும் இடமான ராமேஸ்வரத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். மனிதச் சங்கிலி நிறைவடையும் இடமான ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags : protest , Human chain,600 km ,protest ,hydrocarbon project
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...