×

டாப்சிலிப்பில் தொடர் மழை யானை சவாரி இன்றும் ரத்து

கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான டாப்சிலிப்பில் பெய்த மழையின் காரணமாக யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.  கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகள், மூலிகை பண்ணை, வாகனத்தில் வனச்சுற்றுலா, பயணிகளுக்கு யானை சவாரி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். யானை சவாரிக்காக கலீம், பரணி, சுயம்பு, மாரி உள்பட 6 கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த யானைகள் டாப் சிலிப் அருகேயுள்ள கோழிகமுத்தி முகாமில் இருந்து தினசரி டாப்சிலிப் கொண்டு வரப்பட்டு யானை சவாரி நடத்தப்படுகிறது.

பயணிகளை ஏற்றி செல்லும் யானை சவாரி அங்குள்ள வனப்பகுதிக்குள் சற்று தூரம் சென்று திரும்புவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், இந்த பகுதியில் கடந்த 2 வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை நாட்களில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி யானை சவாரி ரத்து செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தற்போது வார விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்காக நேற்று காலை 2 கும்கி யானைகள் சவாரிக்காக டாப்சிலிப்பிற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், காலை முதல் லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் யானை சவாரி ரத்து செய்யப்பட்டது. இன்றும் மழை பெய்தபோது ரத்து செய்யப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வனத்துறையினர் கூறுகையில், மழையில் யானை சவாரி மேற்கொண்டால் ஈரத்தரையில் யானைகள் சறுக்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது, மேலும் மழையில் நனையும் பயணிகளுக்கு உடல் நலம் பாதிப்பதை தடுப்பதற்காக மழை நாட்களில் சவாரி நிறுத்தப்படுகிறது. மழை இல்லாவிட்டால் சவாரி தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

Tags : rain elephant ride ,Topslip , Topsily, continuous showers, elephant rides, cancellations
× RELATED டாப்சிலிப்பில் வெயிலின் தாக்கத்தை...