×

சித்தா படிப்பிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: சித்தா படிப்பிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் மின்தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்ய ரூ55 லட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 24 மணிநேரமும் இயங்கும் மின்தடை குறைதீர்க்கும் சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட அம்மா காப்பீடு திட்ட வார்டினை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த வார்டில் மேம்படுத்தப்பட்ட 30 படுக்கைகள் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளின் அருகில் உடன் வந்தவர்கள் இருக்க வசதியாக மடித்து வைக்கும் வகையில் இருக்கைகள், எல்.இ.டி. டி.வி.கள் உள்ளே பொருத்தப்பட்டு உள்ளது.

இதில் மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சிசுந்தரம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: இந்த ஆண்டு சித்தா படிப்பிற்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை. சித்தா படிப்பிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது. தமிழக அரசின் அம்மா காப்பீட்டு திட்டத்தின் கீழ், தமிழக அரசு இதுவரை ரூ5 ஆயிரத்து 900 கோடி செலவு செய்து உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை அரசு மருத்துவமனைக்கு அதிகரித்து உள்ளது.

கேரளா எல்லை மாவட்டங்களில், தமிழக அரசு மிக கவனமாக கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தமிழகத்தில் நிபா வைரஸ் இதுவரை யாருக்கும் வரவில்லை. பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்தில் அதிக அளவு பேர் பணியாற்றுவதற்கு வந்தாலும் மூளை காய்ச்சல் என்பது பரவுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அது தொற்று நோய் கிடையாது. சுற்றுச்சூழல் என்பதே தமிழகத்தில் நன்றாக பராமரிக்கப்படுவதால், மூளை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Siddha ,Minister Vijayabaskar , Siddha, Need, Exclusion, Minister Vijayabaskar
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...