களக்காட்டில் அய்யாவழி மாநாடு: கும்மியாட்டம், கோலாட்டத்துடன் நாராயணசுவாமி வாகன பவனி

களக்காடு: களக்காட்டில் அய்யாவழி 7வது மாநாட்டை முன்னிட்டு கும்மியாட்டம், கோலாட்டத்துடன் அய்யா நாராயணசுவாமி வாகன பவனி நடந்தது. இதனை ஸ்ரீகுருசிவசந்திரர் தொடங்கி வைத்தார். களக்காட்டில் அய்யா நாராயணசுவாமியின் அறநெறி கோட்பாடுகளை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் அய்யா வழி சிறப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 7வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாநாட்டு திடலில் விஷேச அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி எழுந்தருளி காட்சி அளித்தார். கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் மாநாடு கோலாகலத்துடன் துவங்கியது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து அகில திரட்டு திரு ஏடு வாசித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனை மாநாட்டு குழு தலைவர் சிவப்பிரசாமி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து அய்யாவின் வாகன பவனி இடம்பெற்றது. வாகன பவனிக்கு கரையிருப்பு நாராயணன் தலைமை வகிக்தார்.

கூடங்குளம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சாமிதோப்பு ஸ்ரீகுருசிவசந்திரர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நாராயணசுவாமி எழுந்தருளி பவனி வந்தார். வாகனத்திற்கு முன்பு பதி பண்டாரங்கள் சிவகாண்ட பாடல்கள் பாடியவாறும், சிறுமிகள் கோலாட்டமும், பெண்கள் கும்மியாட்டமும் ஆடியவாறு சென்றனர். பக்தர்கள் கைகளில் காவி கொடி ஏந்தி அய்யா, சிவ,சிவ அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கமிட்டவாறு சென்றனர். ரத வீதிகளில் செண்டை மேளம், ராஜமேளங்கள் முழங்க, சங்குநாத இசையுடன் அய்யா நாராயணசுவாமி பவனி வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. வழிநெடுக பக்தர்கள் சுருள் வைத்து சுவாமி தரிசனமும் செய்தனர். அதன்பின் மாநாடு தொடங்கியது. நெல்லை தொகுதி முன்னாள் எம்.பி. ராமசுப்பு  தலைமை வகித்தார். மாநாட்டு குழு பொறுப்பாளர் பால்சாமி வரவேற்றார். பேராசிரியை ஸ்ரீமதி அகிலத்திரட்டு குறித்து விளக்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், டாக்டர் சொக்கலிங்கம், வள்ளியூர் தெய்வேந்திரன், களக்காடு நயினார், திசையன்விளை லைசாள் எட்வர்டு உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் இரவில் சாமிதோப்பு ஸ்ரீகுருசிவசந்திரரின் அய்யா வழி அருளிசை வழிபாடு நடைபெற்றது. இதனை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாநாட்டு குழு தலைவர் சிவப்பிரசாமி, துணை தலைவர் சங்கரன் பொறுப்பாளர்கள் பால்சாமி, சுப்பிரமணியன், சேர்மன்ராஜ், சொர்ணலிங்கம், மணி, கார்த்திக், பாஸ்கர், சண்முகநாதன் செய்திருந்தனர்.

Tags : Ayyaveda Conference ,Kalakkad ,Narayanaswamy Vehicle Drive , Kalaikkadu, Ayyavali Conference
× RELATED களக்காடு அருகே சாலை அமைக்கும் பணிகள் முடக்கம் விவசாயிகள் கடும் பாதிப்பு