×

‘சிமி’ அமைப்பு மீதான தடை நீட்டிப்பா? நீக்கமா?.. குன்னூரில் இன்று 2வது நாளாக விசாரணை

குன்னூர்: சிமி அமைப்பின் மீதான தடை முடிவடைந்துள்ள நிலையில், அதன் மீது தடையை நீட்டிப்பதா?, நீக்குவதா? என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் நேற்று குன்னூரில் விசாரணையை துவக்கியது. இன்று 2வது நாளாக நடக்கிறது.  சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்டது. பல்வேறு நாச செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதால், கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. 2014ம் ஆண்டு தடை நீட்டிப்பு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், தடையை நீட்டிப்பதா?, நீக்குவதா? என்பது குறித்த விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம்  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இது தொடர்பான விசாரணை நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நகராட்சி கூட்ட அரங்கில் துவங்கியது.

இதில், நீதிபதி முக்தா குப்தா தலைமையில் தீர்ப்பாயத்தின் சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு, மாநில உளவுதுறை அதிகாரிகள் என 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிமி அமைப்பின் மூலம் பல்வேறு மாநிலங்களில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தினர். இதில், பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் சிமி அமைப்பினர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீதான தடை விலக்கப்பட்டால் தேச விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடும் அபாயம் உள்ளதாக கூறினர். அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜாராகி தன் வாதங்களை முன் வைத்தார். இந்து அமைப்பு சார்பாக சிமி அமைப்பின் தடையை நீட்டிக்க கோரி வழக்கறிஞர் சந்திரசேகர் தனது வாதங்களை முன் வைத்தார்.

சிமி அமைப்பின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விசாரணை இன்று 2வது நாளாக துவங்கியது. நாளை வரை இந்த விசாரணை நடக்கிறது. 3 நாள் விசாரணையின் முடிவில் ‘சிமி’ அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா? அல்லது விலக்கி கொள்ளப்படுமா? என முடிவெடுக்கப்பட உள்ளதாக விசாரணையில் பங்கேற்றவர்கள் கூறினர். 


Tags : Coonoor , Time SIMI phone system, ban
× RELATED குன்னூர் அருகே குடியிருப்பு...