×

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 102 கன அடியாக குறைந்தது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என பாசனப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணை பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு அணை நீர்த்தேக்க பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியதோடு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாகவும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழாக குறைந்தது.  

இந்த ஜூன் மாத தொடக்கத்தில் கேரளாவில் பருவமழை தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 17ம் தேதி அணை நீர்மட்டம் 55.08 அடியாக இருந்தது. அதன் பின்னர் 2 நாட்கள் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 18ம் தேதி 450 கன அடியும், 19ம் தேதி 1364 கன அடியும், 20ம் தேதி 519 கன அடியும் தண்ணீர் வந்தது. இதனால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. கடந்த 20ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.53 அடியாக இருந்தது.
அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் சரிந்தது.

கடந்த 21ம் தேதி 55.48 அடியாக சரிந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 55.38 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 114 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி 102 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. நீர் இருப்பு 5.8 டி.எம்.சி.யாக உள்ளன. அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 2018 ஜூன் மாதம் 22ம் தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74 அடியாகவும், நீர் இருப்பு 12.6 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நீர்மட்டம் 55 அடியாக இருப்பது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. நீர்வரத்து குறைவாக உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நீர்மட்டம் உயர மழை பெய்ய வேண்டும் என்று வருண பகவானிடம் அவர்கள் ேவண்டியபடி உள்ளனர்.

Tags : catchment areas ,Bhawanisagar Dam , Watershed Area, Bhawanisagar Dam
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்