வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. தூண் பாறை, குணா குகை, கிரின் வேலி வியூ, மோயர் பாயின்ட், பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ், பிரையண்ட் பூங்கா என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. இதில் கிரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை பகுதியில் மேகமூட்டம் இருந்ததால் ஏமாற்றமடைந்தாலும் தூண் பாறை, குணா குகையில் மேகமூட்டம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தெளிவாக கண்டு ரசித்தனர்.

ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். மேலும் பகல் நேரத்தில் குறைவான வெயில் அடித்தும், மாலை மற்றும் இரவில் குளிர் நிலவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஓட்டல், விடுதி, டாக்ஸி, கைடு என சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒரே நாளில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கொடைக்கானல் நகரின் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். எனவே விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன் பார்க்கிங் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal , Weekend, Kodaikanal, Tourists
× RELATED கொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும்...