மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி: ஊதியமின்றி தவிக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள்.. வறுமையால் தற்கொலையை நாடும் அவலம்

திருமங்கலம்: மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்குவதால், தமிழகத்தில் ஊர்க்காவல்படை வீரர்கள் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்கள், கோயில் திருவிழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ஊர்க்காவல் படை வீரர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். சீருடையுடன் மினி போலீசாகவே இயங்கும் இவர்கள் பாதுகாப்பு பணி மட்டுமின்றி, பேரிடர் மீட்பு பணிகளிலும் தங்களது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் எஸ்பி கட்டுப்பாட்டின் கீழ் ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளாவில் ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கேற்ற ஊதியம் பெறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஊர்க்காவல் படையினர் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. தமிழகத்தில் மட்டும் 14,500 பேர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றனர். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, திருச்சி, கோவை, வேலூர் என பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களில் பலர் வறுமையில் வாடி வருகின்றனர். இதற்கு காரணம் பணி நிரந்தம் இல்லை என்பதுடன் மட்டுமின்றி சம்பளம் மிக, மிக குறைவாக வழங்குவதே ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற நிலையிலேயே பணியில் சேர்ந்தாலும், ஊர்க்காவல் படை வீரர்களில் பலர் மாஸ்டர் டிகிரி வரை முடித்து ஆர்வத்துடன் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் இவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள்தான் பணி வழங்கப்படுகிறது. பணியின் போது ஒரு நாளைக்கு ரூ.575 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

5 நாள் பணியில் ஒரு நாள் வராவிட்டால் கூட இவர்களுக்கு, போலீசாருக்கு தரப்படும் மெமோ உள்ளிட்ட கடினமான தண்டனை வழங்கப்படுகிறது. 2, 3 டூட்டி வராவிட்டால் எந்தவித விளக்கங்களுமின்றி, இவர்களை வேலையை விட்டு நீக்கி விடுகின்றனர். இதனால் பிற பணிகளில் சேர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் குடும்பத்துடன் வறுமையில் வாடும் நிலை உண்டாகிறது. கடந்த சில தினங்களுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து ஊர்க்காவல்படை வீரர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் எங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அண்டை மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் ஊர்க்காவல்படை வீரர்களை பணிநிரந்தம் செய்துள்ளனர்.

ஊதியமாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வரை அந்த மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. மேலும் போலீசாருக்கு உள்ளது போல் மானிய விலையில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவையுடன், குடியிருப்பும் கட்டி தந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் பணி நாட்களை குறைத்ததுடன் ஊதியமும் போதுமானதாக இல்லை. கோயில் திருவிழா, விஐபி பந்தோபஸ்து, தேர்தல் காலங்களில் இரவு பகலாக பணியாற்றுகிறோம். ஆனால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் பேசியும் பயன் இல்லை. நாங்கள் கேட்பது தினசரி வேலை. வேலைக்கு ஏற்ற ஊதியம், பணி நிரந்தரம்தான். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : soldiers ,Guard ,suicide , Work, pay, and guards
× RELATED உதவியாளர், காவலர் பணிக்கு நேர்காணல்