×

தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் சந்திக்கலாம்: அமேதியில் வீடு கட்டி குடியேற மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு

அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமேதியிலேயே சொந்தமாக வீடு கட்டி குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மீண்டும் 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அமேதி தொகுதியில்
அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதன்மூலம் நீண்ட காலமாக காந்தி குடும்பத்தினர் வசமாக இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபோது, சக உறுப்பினர்கள் நீண்ட நேரம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். ராகுல் காந்தியை தோற்கடித்ததால் நீண்ட நேரம் கைத்தட்டி பா.ஜனதாவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தொகுதியில் 2004-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருந்துவந்தார். இப்போது வெற்றி பெற்றுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொகுதியின் மீது சிறப்பு கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் நேற்று முதல் முறையாக, அமேதிக்கு சென்ற அவர், பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி இராணி, அமேதியிலேயே தான் சொந்தமாக வீடு கட்டி குடியேற உள்ளதாகவும், அமேதி மக்கள் தங்கள் பிரதிநிதியைக் காண டெல்லி வரை செல்ல வேண்டியதில்லை எனவும் கூறினார். மேலும் பொதுமக்களுக்காக தனது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கும் எனக் கூறிய அவர், தன்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Smriti Irani , People, Amethi, Home, Smriti Irani
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு