×

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: விஜய், சூர்யா, ஆர்யா, குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்களிப்பு

சென்னை: நீதிமன்ற வழக்குகள், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னை அபிபுல்லா சாலையில் உள்ளது. சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 23ம் தேதி (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் நாசர் தலைமையின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த அணியை எதிர்த்து டைரக்டரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து சங்க பதிவாளர் உத்தரவிட்டார். இதற்கு, நடிகர் விஷால் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தேர்தலை நிறுத்த பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது.

தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது’ என்று கூறி வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்நிலையில் நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு நிலுவையில் உள்ள வழக்கை விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று விஷால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நடிகர் சங்க தேர்தலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த வேண்டும். தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவை தேர்தல் நடத்தப்பட்டு இரவு 8 மணிக்கு பள்ளியை காலி செய்துவிட வேண்டும். தேர்தல் நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

நடிகர்கள் விஷால், கே.பாக்யராஜ், நாசர், ஆர்யா, சிபி, பாண்டியராஜன், பிரசாந்த். உதயா, சூர்யா, விஜய், ஆசியா. கவுன்டமணி, செந்தில், சந்தானம், நாசர், ராம்கி, சாந்தனு, பொன்வண்ணன், சார்லி, சுந்தர்.சி, ரமேஷ் கண்ணா, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மனோபாலா, விதார்த், அருண்பாண்டியன். நடிகைகள் குஷ்பு, சங்கீதா, சரண்யா, வடிவுக்கரசி, ஆர்த்தி, கோவை சரளா, காயத்ரி, குட்டி பத்மினி, கே.ஆர்.விஜயா, லதா, அம்பிகா, ராதா, ஷீலா உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171 ஆகும். ஆனால் வாக்குப்பதிவு நிறைவில்
1579 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் அவர் நேரில் வாக்களிக்க வரவில்லை. தனக்கு அனுப்பிய தபால் ஓட்டுக்கான படிவம் தாதமதமாக வந்ததால் தன்னால் வாக்களிக்க முடியவில்லை அதற்காக வருந்துகிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்திருக்கிறார்.

நடிகர், நடிகைகள் பேட்டி:

நடிகர் கமல்:
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம் என்றார். தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றும் அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். நண்பர் ரஜினி காந்தின் ஓட்டு எல்லா உறுப்பினர்களை போல மிக முக்கியமான ஓட்டு,அவர் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றார். வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

விஷால்: ஒருவரால் பிரச்னை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு தரப்பட்ட பொதுச் செயலாளர் பதவி சாதாரண பதவி அல்ல. நீதிமன்றத்தின் தீர்ப்பை  அமல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில்  அனைவரையும் குஷிபடுத்த வேண்டும் என்றால் ஐஸ்கிரீம்தான் விற்க வேண்டும்.

நடிகர் நாசர்:
சட்டப்படி தேர்தல் நடைபெற்று வருகிறது, கால தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிக்கு தபால் வாக்கு காலம் தாழ்ந்து சென்றதற்கு வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜயகுமார்:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என்று மாற்ற நடிகர் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தப்பின் பேட்டியளித்த நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா:
அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். தவறான புரிதலால் சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன. தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறியது வேடிக்கையானது என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

நடிகர் ஷியாம்:  
நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக செயல்படுவோம் நடிகர் ஷியாம் தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியினர் சில விவகாரங்களில் பொறுப்புணர்வு இன்றி உள்ளனர் என்றும் அது குறித்து கேள்வி கேட்டால் பதிலளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மன்சூர் அலிகான்:
தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். தண்ணீர் பிரச்னையை மறைப்பதற்காக இதை பெரிதாக்குகிறார்கள். நீதிமன்றம் செல்லாமல் அவர்களுக்குள் பேசி இருக்கலாம்.

நடிகர் பிரசாந்த்:
வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தேர்தல் அறிக்கையில் நல்ல திட்டங்களை சேர்த்துள்ளோம்.

குஷ்பு:
பல தடைகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகின்றது. உண்மை, நியாயம் வெல்லும். நடிகர் சங்க தேர்தலில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

கோவை சரளா:
பாண்டவர் அணி நிச்சயம் வெற்றி பெறும். தபால் ஓட்டுக்கள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல.

நடிகை வெண்ணிறாடை நிர்மலா:
நல்லது செய்பவர்கள் ஜெயித்து வர வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

Tags : Vijay ,Surya ,Arya ,Khushboo , South Indian Actors Association Election, Voting Completion, Vijay, Surya, Arya, Khushboo, Stars
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்