×

குடிநீர், சாலை, மின்சாரம் எதுவுமே இல்லை வாழ்க்கையும், வலியும் எங்களுக்கு மலையளவு

* வருசநாடு மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் புலம்பல்
* வனத்துறை கெடுபிடியால் வாழ்வாதாரம் இழக்கும் அவலம்

வருசநாடு: வருசநாடு அருகே 3 தலைமுறைகளாக குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மலைக்கிராம மக்கள் பரிதவிக்கின்றனர். மேலும், வனத்துறை கெடுபிடியால் வாழ்வாதாரம் இழந்து வருவதாக புலம்பி வருகின்றனர். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பாலியல் டார்ச்சர்: கிராமங்களின் நிலையே இப்படி என்றால், மலைக்கிராம மக்களின் வாழ்க்கை ரொம்பவே பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஒருபக்கம் குடிநீர், சாலை, மின்சார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகின்றனர். மறுபுறமோ வனத்துறையினரின் கெடுபிடி, பாலியல் தொல்லைகள் என பாடாய்படுகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம், வருசநாடு அருகே வசிக்கும் மலைக்கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகின்றனர்.

வனத்துறை கெடுபிடி: தேனி மாவட்டம், வருசநாடு அருகே அரசரடி, நொச்சிஓடை, இந்திரா நகர், பொம்மராஜபுரம், வெள்ளிமலை, குழிக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் அதிகளவு உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, குடிநீர், மின்சாரம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் கேட்டு பலவிதமான போராட்டங்கள் நடத்தியும் பலனின்றி வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமங்களில் வசிப்பவர்களில் பலர் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும். அதுபோக தேன் எடுத்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதுவுமே கிடைக்காதபட்சத்தில் ரேஷனில் கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உள்ளது. இப்பகுதியில் இலவம் பஞ்சு, முந்திரி முக்கிய விவசாயமாக உள்ளது. கால்நடை வளர்ப்பிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ் வசதியும் ‘புஸ்ஸ்ஸ்ஸ்’: வருசநாடு அருகே நொச்சிஓடை,  வடக்கு அரசரடி பொம்மராஜபுரம், குழிக்காடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பஸ் வசதியின்றி பெரும் அவதியடைகின்றனர். அன்றாட தேவையான அரிசி, பருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட, சுமார் 10 கிமீ தூரம் நடந்து அரசரடி கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கிருந்து பஸ் ஏறி கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். டாக்டர்களுக்கு பார்வை நேரம் இருப்பது போல, இவர்களுக்கும் பயண நேரம் உள்ளது. இவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிக்குள், தங்களது பணிகளை முடித்துக்கொண்டு கிராமங்களுக்கு திரும்ப வேண்டும். டோலி கட்டி தூக்கி... வனத்துறை கெடுபிடி இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் தாமதமாகும்போது, பக்கத்து கிராமங்களில் தங்கி காலையில் கிளம்பி செல்கின்றனர்.

தீவிர காய்ச்சல், பிரசவ வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கூட மூலிகை வைத்தியம் பார்க்கும் நிலையில்தான் உள்ளனர். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டியே கீழே தூக்கி வருகின்றனர். ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலையிலே வருசநாடு சுற்றுவட்டார மலைக்கிராமங்கள் உள்ளன. பஸ் மற்றும் வாகன போக்குவரத்துக்கு உகந்த சாலை வசதி இல்லாததும் இதற்கு முக்கிய காரணம். அரசரடி, வெள்ளிமலை கிராமம் வரை மட்டுமே பஸ் வசதி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே வந்து செல்கின்றன. பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. குடிநீருக்காக பரிதவிப்பு: இதுகுறித்து மலைவாழ் மக்கள் தலைவன் சதாசிவம் கூறுகையில், ‘‘குடிநீருக்காக கடும் சிரமம் அடைகிறோம். அரசு எங்களுக்கு மானியத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க உதவினால் பிழைத்துக் கொள்வோம். இல்லையென்றால் உயிர் விடுவதை தவிர வேறு வழியில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பட்டினியோடு வாழ்க்கை: நொச்சிஓடை கிராமவாசி செல்லம்மாள் கூறுகையில், ‘‘மரக்கூட்டில் இருந்து தேன்,  கிழங்கு பறித்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். மழையில்லாததால் அதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பசி, பட்டினியோடு வாழ்ந்து வருகிறோம். தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அரசரடி கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்தையா  கூறுகையில், ‘‘கூலித்தொழில், ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்வதே எங்கள்  பணியாக இருந்து வருகிறது. மீதமுள்ள காலங்களில் ரேஷன் அரிசியை உண்டு  வாழ்ந்து வருகிறோம். அரசு நல உதவி திட்டங்களை செய்து கொடுத்தால் எங்கள்  வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்’’ என்றார்.

அதிகாரிகள் ‘சுத்தமா’ எட்டிப்பார்ப்பதில்லை
கடமலை - மயிலை ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசரடி, நொச்சி ஓடை, காமராஜபுரம், வெள்ளிமலை, இந்திரா நகர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுகாதாரத்துறை கண்டுகொள்வதே இல்லை. இங்கு வசிப்பவர்கள் மேல்சிகிச்சைக்காக கடமலைக்குண்டு, வருசநாடு, தேனிக்கு என அதிகபட்சமாக 45 கிமீ தூரம் வரை பயணிக்க வேண்டும். இதற்கு சிரமமடைந்தே மூலிகை மருத்துவம் பார்த்தே பிரச்னைகளை தீர்த்துக் கொள்கின்றனர் மக்கள்.

அரசரடி கிராமமும்... அரசுப்பள்ளியும்...
வருசநாடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு ‘தலைமைக்கிராமமாக’ அரசரடி உள்ளது. இங்குள்ள அரசுப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த பள்ளிக்கு மின்வசதி, காம்பவுண்ட் சுவர், குடிநீர் வசதி கிடையாது. பல மாணவ, மாணவிகள் பெற்றோருடன் நீண்ட தூரம் பயணித்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளி, வீட்டிலும் மின்வசதி இல்லாததால் அரிக்கேன் விளக்கு அல்லது தீக்கனலை மூட்டி படித்து வரும் அவல நிலை உள்ளது.

இருண்டு கிடக்கும் வாழ்க்கை
அரசரடி மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் விளக்குகள் போடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் அரிக்கேன் உள்ளிட்ட மண்ணெண்ணெய் விளக்குகளில் படித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் வசிக்கவே பயமாக உள்ளது. எனவே, எங்கள் பகுதி மலைக்கிராமங்களுக்கு மின்வசதி வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். தேனி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் மலைவாசிகளாகவே வாழ்ந்து விடுகிறோம்’’ என்றனர்.

பாதுகாப்புக்காகவே தலையிடுகிறோம்
இதுகுறித்து மேகமலை வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை விலங்கிடமிருந்து பாதுகாப்பது  எங்கள் பணியாக இருந்து வருகிறது. அவர்களுக்கு  ஒரு போதும் தீங்கு விளைவிக்க மாட்டோம். அவர்களின் உயிர் பாதுகாப்பு  சம்பந்தமாக நாங்கள் அவ்வப்போது தலையிடுவது உண்டு’’ என்றனர்.

Tags : road ,mountain , Drinking water, road, electricity, living,, pain
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி