×

கூவம் ஆற்றின் குறுக்கே 3 ஆண்டுகளாக உடைந்துகிடக்கும் அணைக்கட்டு சீரமைக்கப்படுமா?: மழை பெய்தால் வெள்ள அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த கொரட்டூர் அணைக்கட்டு, கனமழையால் உடைந்து சேதமாகி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.திருவள்ளூர் மாவட்டம் கொற்றலை ஆற்றில் செல்லும் மழை நீர் பூண்டி ஏரிக்கும், கூவம் ஆற்றில் செல்லும் மழை நீர், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் செல்கிறது. இங்கு துவங்கும் கூவம் ஆறு பேரம்பாக்கம், அதிகத்தூர், மணவாளநகர்,  அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு வழியாக, 72 கி.மீ., தூரம் சென்று, நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இங்கிருந்து சென்னை அரும்பாக்கம் வழியாக  எப்போதும் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையிலும் ஷட்டர்களை திறந்தால் புதுச்சத்திரம், நேமம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையிலும் கடந்த 1879ல் ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு கட்டப்பட்டது. இது  பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டுஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த அணைக்கட்டு சேதமடைந்தது. ஆனால், இதுவரை சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. அணைக்கட்டு பகுதியில் உள்ள மணல், கொள்ளை போவதும் தொடர்கிறது. அணையை  சீரமைக்கவோ, மணல் கொள்ளையை தடுக்கவோ அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், வரும்காலத்தில் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தால், தண்ணீரை  சேமிக்கவும் இயலாமல், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் செல்ல இயலாமல் வீணாக கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடைந்த ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை தேவை: மழைநீர், வீணாக கடலுக்குள் செல்வதை தடுத்து, விவசாயம் மற்றும் கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம் என, விவசாயிகள் கூறுகின்றனர். இந்த ஆற்றில்  பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம், அகரம், அதிகத்தூர், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயர்வதோடு, 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன் பெறுவர். திருவள்ளூர் நகர மக்களின்  குடிநீர் பிரச்னையும் தீரும். இந்த ஆற்றில் இருந்து பிரியும், 22 கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெற்று, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற, கூவம் ஆறு துவங்கும் கேசாவரம் அணைக்கட்டில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் இருபுறமும் சர்வே செய்து, 9 ஆண்டுகளுக்கு முன் கல் நட்டுள்ளனர். ஆனால்,  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள கிராம விவசாயிகள், கூவம் ஆற்றில் வெள்ளம் எப்போது வருமோ, என்ற அச்சத்தில் உள்ளனர்.

Tags : dam ,Koovam River , Cauldron, dam, rain, flood hazard
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...