×

குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகும் அபாயம்: குமரியில் சாலைகளை உடைத்து கூட்டுக்குடிநீர் திட்டம்... போக்குவரத்து பிரச்னைகளும் தலைதூக்கும்

நாகர்கோவில்: குமரியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் உடைக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. குமரியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டுக்குடிநீர் திட்டங்கள்    கொண்டு வரப்பட்டுள்ளது. அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, தாழக்குடி, தேரூர், ஆரல்வாய்மொழி, மருங்கூர், மைலாடி, அழகப்பபுரம், கொட்டாரம் ஆகிய 9 பேரூராட்சிகள் மற்றும் 246 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ₹109 கோடி மதிப்பீட்டில் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக கோதையாற்றில் தண்ணீர் எடுத்து, களியல், குலசேகரம், அருமநல்லூர் வழியாக அழகியபாண்டியபுரத்திற்கு கொண்டு வந்து, அழகியபாண்டியபுரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரித்து வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் சிலர் கோதையாற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் இடையூறு ஏற்பட்டது. எனினும் பொன்மனை மங்கலம் பகுதி முதல் திட்ட பயன்பாடு கிராமங்கள், பேரூராட்சிகளில் குழாய்கள் மற்றும் நீரேற்று நிலைய பணிகள் நிறைவடைந்து விட்டன.  மங்கலம், குலசேகரம், களியல் வரை மட்டும் குழாய்கள் பதித்தால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிடும். இந்நிலையில், குலசேகரம் பகுதியில் பதிக்கப்படும் குழாய்கள் பல பழுதடைந்து தரமற்றதாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புத்தன் அணை திட்டம்:  நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீர் சந்திக்கும் புத்தன்அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர, மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ₹251 கோடி மதிப்பீட்டில் புத்தன்அணை திட்டம் கொண்டு வரப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சுருளோடு முதல் நாகர்கோவில் வரை 31 கி.மீ தொலைவிற்கு பிரதான சாலையோரம் வழியாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதில், புத்தேரி வரை குழாய்கள் பதிக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளங்கள் காரணமாக  சாலையின் அகலம் பாதியாக குறைந்து விட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் மூடப்படாத பள்ளங்களில் செல்லும் போது, நிலைதடுமாறி பஸ் மற்றும் கனரக வாகனங்களில் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் மூலம் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. இதுதவிர வாகனங்கள் எதிரெதிரே செல்ல முடியாத நிலை உள்ளதால் போக்குவரத்து ெநருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த பள்ளங்களில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த பள்ளங்களில் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக சாலைகளில் தொலைபேசி மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தும் முன்பு பள்ளத்தை சரி செய்து சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில், நெடுஞ்சாலைத்துறைக்கு உரிய தொகை செலுத்தப்படும். தற்போதும், இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்ட, பகுதிகளில் சாலை சீரமைத்து தர மாநகராட்சியால், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நெடுஞ்சாலைத்துறைக்கு குறித்த தொகை செலுத்தப்பட்டுவிட்டது, ஆனால் நெடுஞ்சாலைத்துறை இதுவரை இந்த சாலையை சீரமைக்கவோ, அல்லது பள்ளம் தோண்டிய பகுதியில் முன்புபோல் சமன் செய்து, தார் கலவை அல்லது கான்கிரீட் கலவை மூலம் சரிசெய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் இச்சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணியல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களால் அவதி
இரணியல், முளகுமூடு, வாள்வச்சகோஷ்டம்,  திருவிதாங்கோடு, விலவூர், கப்பியறை, கோதநல்லூர் பேரூராட்சிகள், பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் 374 கிராமங்கள் பயன்பெறும் வகையில், ₹246 கோடியில் இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டதிற்கு குழித்துறை அருகே ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காட்டாத்துறை முதல் தக்கலை வரையிலும், திருவிதாங்கோடு, முளகுமூடு என கிளைச்சாலைகளில் ராட்சத குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இதர பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குழாய்களால் போக்கு
வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஒரு மாதத்திற்குள் பாலமோர் சாலை சீராகும்
இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களிடம் கேட்டபோது,  தற்போது பதிக்கப்படும் குழாய்கள் பலமுறை தரபரிசோதனை  செய்யப்பட்டவை. எனவே உடையாது. நவீன தொழில்நுட்பம் மற்றும் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். எனவே குழாய்கள் உடைந்து சாலைகள் பாழாகும் என்ற அச்சம் வேண்டாம். பாலமோர் சாலையில், முதல் கட்டமாக சுருளோடு பொன்மனை வரையிலும், அடுத்து தடிக்காரன்கோணம் பகுதியும் நெடுஞ்சாலைத்துறை வசம் சில நாட்களில் ஒப்படைக்கப்பட்டு, உடன் சாலை சீரமைக்கப்படும். ஒரு மாதத்திற்குள் புத்தேரி வரை சில சோதனைகள் முடிந்து முற்றிலும் சீரமைக்கப்பட்டு விடும். அழகியபாண்டியபுரம் திட்டத்தில், பணிகள் நிறைவடைந்து விட்டன. குலசேகரம் முதல் களியல் வரை 6 கி.மீ மட்டும் குழாய்கள் பதிக்க வேண்டும். அப்பணியும் விரைவில் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்
ஆஸ்டின் எம்.எல்.ஏ கூறியதாவது: புத்தன் அணை திட்டத்திற்காக  தோண்டப்பட்ட பள்ளங்களால் இருமாதத்தில் 3 பேர் இறந்து விட்டனர். பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலை ஓரங்களை சமன் செய்ய கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே சாலைகளை சமன் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : pipeline breakdown ,Kumari , Kumari, Joint Water Supply Project, Transport Problem
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து