×

புதுக்கோட்டை அருகே விவசாயிகள் போராட்டம்: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் கிராமத்தில் விளை நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசல் கிராமத்தில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலோனோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 2,500 ஏக்கரில் வாழை, நெல், உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இதனிடையே இந்தியன் எண்ணெய் ஆலை நிறுவனம் சார்பில் தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு கொண்டு செல்லும் வகையில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சித்தனர்.  குறிப்பாக வாழை பயிரிட்ட விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்க முயற்சி செய்ததை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து எண்ணெய் நிறுவனம் சார்பில் விவசாயிகள் 10 பேருக்கு காசோலை வழங்கியதாக கூறப்படுகிறது. இதே அணுகுமுறையில் மற்ற பகுதியில் உள்ள விளைநிலங்களிலும் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 17ம் தேதி சென்று அங்கு நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.
ஆனால், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் குலையன்கரிசல் விவசாய சங்கத்தின் முன்பு திரண்டு திடீர்  போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து குலையன்கரிசல் விவசாய சங்கத் தலைவர் ஆஸ்கர், செயலாளர் ஜெகன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் விவசாயிகளை சமரசப்படுத்தினர். இதில் எரிவாயு குழாய்களை மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை எஸ்ஐ அந்தோணிராஜ் மற்றும் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியன் எண்ணெய் ஆலை நிறுவன அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் சமரச கூட்டத்தில் கலந்துபேசுவது என முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : protest ,Pudukkottai ,farmland , Pudukkottai, farmers, struggle,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...