×

தருவைகுளம் கடலில் சூறாவளியால் வலைகள் சேதம்: வெறுங்கையுடன் கரை திரும்பிய மீனவர்கள்

குளத்தூர்:  தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தூர் அடுத்த தருவைகுளம் கடல் பகுதியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி வீசிவருகிறது. இதனால் மீன்பிடித்தொழிலுக்கு செல்லும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் வலையில் மீன்கள் சிக்கவில்லை. ஆழ்கடலுக்கு செல்லும்போது வலைகள் ஒன்றோடு ஒன்றாக பின்னி பலத்த சேதமடைந்தன. இதனால் மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் மீனவர்கள் கரை திரும்பினர். இதன் காரணமாக சனிக்கிழமை தோறும் நடைபெறும் மீன்கள் ஏலக்கூடம், நேற்று அதிகளவில் மீன்கள் வரத்து  இன்றி வெறிச்சோடியது. இருப்பினும் ஒரு சில படகுகளில் கெலவால, சூறை, மயில், சீடிகாறல், சவரன், சீலா போன்ற மீன்வகைகள் குறைந்த அளவிலேயே வரத்திருந்தன.

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்கள் வரத்து அதிகரித்து விலை குறைந்திருக்கும் என நம்பி வந்த வெளியூர் வியாபாரிகள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வரத்து குறைவால் கிலோ ரூ.70, 80 என விற்கப்பட்டு வந்த கெலவால, சூறை மீன்கள் நேற்று ரூ.150 வரை ஏலம் போயின. சீலா கிலோ ரூ.850 வரை விற்பனையானது. சவரன் மீன் ரூ.400க்கும், மயில் மீன் ரூ.200க்கும் ஏலம்போனது.


Tags : sea ,fishermen , Damage, hurricane, nets damage
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...