×

10 ஆண்டுகளாகியும் முடியாத துறைமுகப்பணி..! விரைந்து முடிக்க மீனவர்கள் கோரிக்கை

தேங்காய்ப்பட்டினம்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத நிலையில்  முகத்துவாரப்பகுதியில் மண் திட்டுக்கள் தேங்கி இருப்பதால் விசைப்படகுகள் கவிழ்ந்து ஆபத்து ஏற்படுவதுடன் படகுகளை நிறுத்த கேரளா செல்ல அவல நிலை ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்காக சுமார் ரூ. 200 கோடி மதிப்பில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அரபிக்கடலில் மேற்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்தத் துறைமுகப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

ஆழ்கடலில் 40 முதல் 60 நாட்கள் வரை தங்கி கடலில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் இந்த துறைமுகத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றன. 2500  விசைப்படகுகளும், 8000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்தி வைக்கப்படும் இடமாக கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் அந்த அளவிற்கு படகுகள் நிறுத்தும் தளம் காணப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

திறப்பு விழாவை எதிர் நோக்கி இருக்கும் சூழலில் துறைமுகத்தில் மீன்பிடி வலைகள் பின்னும் கட்டிட வசதி இல்லை. கழிவறை வசதி, குடிநீர்,  மின்விளக்கு, மீன் பதப்படுத்தும் ஐஸ் பேக்டரி வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்றவை  போதுமானதாக இல்லை என்றும் மீனவர்கள் புகார் கூறியுள்ளனர். 10 மீட்டருக்கு மேல் ஆழம் கொண்ட முகத்துவாரப் பகுதி கடல் சீற்றத்தால் மணல்மேடுகளாகி தற்போது 2 மீட்டர் ஆழம் மட்டுமே காணப்படுவதுடன் முகத்துவாரப் பகுதியில் அகலமும் குறைந்து காணப்படுகிறது.

இதனால் கடலில் இருந்து துறைமுகத்துக்குள் நுழையும் பெரிய விசைப்படகுகள் மற்றும் நடுத்தர விசைப்படகுகள் அவ்வப்போது கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவதுடன் புயல் போன்று இயற்கை சீற்ற காலங்களில் கடலில் இருந்து திரும்பும் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு திட்டுக்களால் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவதால் முகத்துவார்ப் பகுதிகளில் மணல் திட்டுக்களை அகற்ற நிரந்திரமாக மணல் அள்ளும் ஒரு எந்திரத்தை நிறுத்த வேண்டும் எனவும் துறைமுகத்தை திறக்கும் முன் சேவைக்கட்டணம் ஒரு படகுக்கு ரூ. 12,500 என்ற மீன்வளத்துறை அறிவிப்பை துறைமுகம் திறப்பு விழா முடிந்த பிறகுதான் வசூலிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திறப்பு விழா தாமதத்தால் குமரி மாவட்ட மீனவர்கள் மீண்டும் கேரள மாநிலம் கொச்சி, கொல்லம் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து துறைமுகத்தை திறக்க வேண்டும் என கூறுகின்றன.


Tags : 10 years, port work, fishermen, demand
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...